
டிராக்டரில் இருந்து இறங்கியபடியே சொன்ன நாராயணனுக்கு, கடலுார், புவனகிரி
வட்டம், அரிராஜ புரத்தில் வங்க கடலுக்கு அருகில் இருக்கிறது ஐந்து ஏக்கர்
விளை நிலம்!
நிலமும் நானும்
'என் பூட்டனு ம் பாட்டனும் உழைச்ச நிலம் இது; அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, நான், தம்பின்னு வாழ்ந்த எங்க வாழ்க்கையோட அச்சாணி; தலை முறைகளா எங்க குடும்பத்துக்கான உயிர்மூச்சு; 14 வயசுல படிப்பை நிறுத்திட்டு இந்த நிலத்துல கால் வைச்சேன்; எனக்கு உழைப்பை சொல்லிக் கொடுத்தது இந்த நிலம்தான்!
'நெல், வேர்க்கடலை, காய்கறி, முந்திரி, சவுக்கு, மல்லிப்பூன்னு இந்த நிலத்துல விளையாததே இல்லை. பீட்ரூட், கேரட், முட்டைகோஸ் வகையறாக்களைத் தான் இன்னும் முயற்சி பண்ணி பார்க்கலை! 'கடலுக்கு பக்கத்துல மணற்பாங்கா இருக்கு; 'தர்பூசணி' போட்டு பாருங் களேன்'னு வேளாண் அதிகாரிகள் வந்து சொன்னப்போ நம்பிக்கை வரலை; சந்தேகத்தோட விதைபோட்டேன்; செம விளைச்சல்!' - தன் நிலத்திற்கும் தனக்குமான பந்தத்தை ஒரே மூச்சாக சொல்லி முடித்தார் 55 வயது நாராயணன்.
இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவி, இரண்டு மகன், இரண்டு மகள் உள்ளனர்.
'இந்த நிலம் அந்த கடவுளுக்கும் மேல' - இப்படி சொல்லணும்னா எதுக்காக சொல்வீங்க?
நான் ரொம்ப பெரிய வீடு கட்டணும்ங்கிறது என் அம்மாவோட பெரிய ஆசை; அடிக்கடி அதை என்கிட்டே சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இந்த நிலத்தை விட்டுட்டு நான் ஆறு வருஷம் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிச்சுட்டு வந்திருந்தாலும் பெருசா என் கையில காசு தங்கலை.
அம்மாவோட வார்த்தைக்காக இருக்குறதை வைச்சு வீடு கட்ட ஆரம்பிச்சிட்டேன்; கட்டி முடிக்கிறப்போ நாலுல மூணு பங்கு செலவு கடன். ஆனா, என் உழைப்புக்கும் அதிகமா விளைச்சலை தந்து மொத்த கடனையும் என்னோட இந்த நிலம் தீர்த்து வைச்சிருச்சு. மனசாட்சியோட சொல்லணும்னா, என் அம்மா ஆசையை நிறைவேற்றி வைச்சது இந்த நிலம்தான்!
ஏற்றம் இறைத்தும், குடத்தில் கொண்டு வந்தும், மோட்டார் வைத்தும், கிணறு வெட்டியும், சொட்டு நீர் மூலமும் பாசனம் பார்த்திருக்கும் இந்நிலம், பல நுாறு ஆண்டுகளாய் நாராயணன் குடும்பத்தாரை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.
இது... என் மண் மீது சத்தியம்
இந்த ஊருல இருந்து வெளி நாட்டுக்கு பிழைக்கப்போன முதல் ஆள் நான்தான். என்னை மறுபடியும் ஊர் திரும்ப வைச்சது இந்த நிலம்; 'திரும்பி வா... நான் இருக்கேன்'னு நம்பிக்கை தந்தது இந்த நிலம்! என்னைப் பார்த்து வெளிநாடு போன பலர் என் உணர்வோடவே திரும்பி வர்றாங்க. அதுக்கு காரணம்... அவங்க நிலம்.
விவசாயம் ஆண்டவன் மாதிரி... கைவிடுற மாதிரி தெரியும்; ஆனா, கைவிடாது .
'மனசோட உழைச்சா மண்ணெல்லாம் பொன்னுதான்!'

