PUBLISHED ON : மே 24, 2026

'ரசாயன உரங்களோட அமிலத்தன்மையால இந்த நிலம் இனி விவசாயத்துக்கு
ஒத்துழைக்காது' - மண் பரிசோதனை செய்த வேளாண் அதிகாரி இப்படிச் சொல்ல
நிலைகுலைந்து போகிறார் பரந்தாமன்.
திருவள்ளூர் பாப்பரம்பாக்கம் கிராமத்தில், மூன்று ஏக்கர் நிலத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாய் உழைத்து வரும் இவர், 58 வயது விவசாயி; மேற்சொன்ன சம்பவம் நிகழ்ந்த ஆண்டு 2020. 'என் நிலம் இனி பயிர் செய்ய ஏற்றதில்லையா' - மனம் குமுற தன் நிலத்தில் அமர்ந்தவரிடம்...
'இப்படி இடிஞ்சு போய் உட்காரலாமா நீ' - வாஞ்சையோடு நிலம் கேட்பது போல் தோன்ற, 'என் சின்ன அண்ணன், தங்கச்சி கல்யாணத்துல இருந்து என் பிள்ளைங்க கல்யாணம் வரை எல்லாத்துக்கும் காரணம் நீதானே' - மனம் தழுதழுக்க நிலத்துடன் மானசீகமாய் பேசத் துவங்கு கிறார்...
'ஒன்றரை ஏக்கர் நிலத்துல மானாவாரி விவசாயம் பண்ணிட்டு இருந்தார் அப்பா. நானும் சின்ன அண்ணனும் மல்லி பூ போட்டோம்; நீ தந்த விளைச்சல்ல ஆறு ஏக்கர் நிலத்துக்கு உரிமையாளர் ஆனோம்; என் பங்கு சொத்தா மூணு ஏக்கரா நீ வந்தே!
'உனக்கு ஞாபகம் இருக்கா... 2000ம் வருஷம் கத்தரி போட்டு வெள்ளத்துல எல்லாம் சேதம் ஆயிருச்சு. ஏதோ ஒரு நம்பிக்கை; வெள்ளத்தால சரிஞ்சு கிடந்த செடிகளை மறுபடியும் நட்டு வைச்சேன். நீ என்னை கைவிடலை; அந்த வருமானத்துல கட்டினதுதானே என் வீடு!
'அடுத்து 500 பப்பாளி மரங்களுக்கு ஆசைப்பட்டேன்; 'வர்தா' புயலால 150 மரங்கள் நாசம்; காயோட எடை தாங்காம 50 மரம் சாய்ஞ்சிருச்சு; ஆனாலும், 300 மரங்கள்ல 20 டன் காய்களை தந்த நீ... என்னை... அய்யோ... அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்டு என் பொன்னரசியை பாழாக்கிட்டேனே...' - பேச முடியாது மனம் உடைந்து கண்ணீரால் நிலம் நனைக்கிறார் பரந்தா மன்.
சில மணி நேரங்களுக்குப் பின்...
'நீ... நான் பெறாத பிள்ளை. என் ன... என்னால இப்போ நீ சவலப் பிள்ளையாயிட்டே; உனக்கு ஊட்டம் கொடுத்து நான்தான் உன்னை தேற்றணும்... செய்றேன்; கண்டிப்பா செய்றேன்' - நிலத்தின் மீது சத்தியம் செய்து எழுந்தவர், கடந்த மூன்று ஆண்டுகளாக 'பந்தல் காய்கறி' பயிரிடுகிறார்.
இயற்கையே தோழன்
பயிரிடும் முன் நிலத்திற்கு எரு உரம்; பூச்சிகளை விரட்ட மீன் அமிலம், மூலிகை பூச்சி விரட்டி; ஒரு அறுவடைக்கு பின்பான இடைவெளியில் ஜனப்புல், தக்கை பூண்டு விதைத்து, அவை பூக்கும் தருணத்தில் அவற்றோடு சேர்த்து நிலம் உழுதல்...
இந்த விவசாய மாற்றத்தால் 'ஆரோக்கியம் பெற்று வருகிறேன்' என விளைச்சல் மூலம் உணர்த்துகிறது நிலம்.
'துவக்கப்பள்ளியை தாண்டாத நான் இன்னைக்கு வீடு, வாசல், கார்னு வாழ்றதுக்கு காரணம் என் நிலம்' - பரந்தாமனின் ஆனந்த கண்ணீர் துளி அவர் நிலம் நனைக்கிறது; நம் பார்வையில் அந்நிலம் சிரித்து சிலிர்க்கிறது.
