தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/நிலமும் நானும்

நிலமும் நானும்

நிலமும் நானும்


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடகை விவசாயி

'குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தர்ற வாடகைத் தாய் மாதிரிதான் நான்' எனச் சொல்லும் இந்த பூமிநாதன் விருதுநகரில் வசிக்கிறார்; வயது 35.

பொறியியல் பட்டதாரியான இவர், தன் வீட்டின் பின்புறமும் மாடியிலும் தோட்டம் வைத்து பராமரிக்க முயன்று தோல்வி அடைந்ததும், அதன் காரணம் தேடத் துவங்கி இருக்கிறார்.

நிலம் தொட்ட தருணம்

கோவை சூலுார், 'செஞ்சோலை இயற்கை வேளாண் பண்ணை'யோட விவசாய பயிற்சியில கலந்துக்கிட்டேன். ரெண்டு பாத்தி அளவுக்கான நிலம் கொடுத்து கீரை விதைக்கச் சொன்னாங்க. மேட்டுப்பாத்தி கட்டி கொத்தமல்லி, வெந்தய விதைகளைத் துாவி நம்பிக்கையோட ஆரம்பிச்சேன்.

மண்ணோட ஈரப்பதத்தை தக்க வைச்சுக்க பண்ணையில கிடந்த தென்னை ஓலைகளை பயன்படுத்தி, 'மூடாக்கு பந்தல்' போட்டேன். உழைப்புக்கு பலன் கிடைச்சதும் பிறந்தது, நிலம் மேல என் முதல் காதல்!

குத்தகை விவசாயி

'இனி விவசாயம் பண்ணிரலாம்'னு நம்பிக்கை வந்தப்போ, இரண்டு ஏக்கர் நிலம் குத்தகைக்கு கிடைச்சது. 'என்ன பயிர் பண்றது'ன்னு யோசனை; நண்பரான ஒரு விவசாயி, 'இயற்கை விவசாயத்துல நாட்டு சுரைக்காய் விதைகள் வேணும்'னு வந்து நின்னார்; அவ்வளவுதான்... களத்துல இறங்கிட்டேன்!

பல தானிய பயிர் போட்டு, உழுது மண்ணை பண்படுத்தி, ரெண்டு மீட்டர் இடைவெளியில சுரை விதைகள் ஊன்றி, கொடிக்கு பந்தல் போடாம படற விட்டேன்; காய் வளர இலைகளை வெட்டி பராமரிச்சேன்; அமோக விளைச்சல்! விதைகள் எடுத்ததுக்கு அப்புறம் சுரை குடுவைகளை குருவிக்கூடா மாத்தி அதுலேயும் லாபம் பார்த்தேன்.

மீண்டும் மாடித்தோட்டம்

ப்ப்ச்ச்ச்... 'குத்தகை விவசாயி' குதுாகலம் ரெண்டே வருஷத்துல வடிஞ்சு போச்சு; தண்ணியில்லாம நிலத்தை பராமரிக்க முடியலை. மறுபடியும் 'மாடித்தோட்டம்' பற்றி புத்தி யோசிக்க, இங்கேயும் தண்ணீர் பிரச்னை. வீட்டு தண்ணி உப்புத் தண்ணியா இருந்ததால, அரிசி களைஞ்ச தண்ணியையும் கலந்து செடிகளுக்கு ஊற்றினேன்.

பண்ணை பயிற்சி தந்த அனுபவத்தால காய்கறி செடிகளுக்கு மத்தியில தேனீ பெட்டிகள் வைச்சேன். தேனீக்களோட மகரந்த சேர்க்கையால கிளைக்கு ரெண்டு காய் தந்த செடி அஞ்சு காய் தந்தது. சுரைக்காய் தந்த நிலம் மாதிரி மாடி தொட்டிகளும் என்னை ஏமாத்தலை!

வாடகை விவசாயி

அடுத்தகட்டமா மாடித்தோட்டம் தொடர்பா 'பயிற்சி வகுப்புகள்' நடத்துற சூழல்ல, 'நிலத்தையும், மாடித்தோட்டத்தையும் பராமரிக்கிற விஷயத்துல மக்கள் தடுமாறுறது தெரிய வந்தது. 'நிலம் இல்லாத நாம ஏன் மத்தவங்க நிலத்தை பராமரிச்சு தர்ற வாடகை விவசாயியா மாறக்கூடாது'ன்னு ஒரு சிந்தனை!

ஆச்சு... அஞ்சு வருஷம்; மாடி தோட்டம், வீட்டு தோட்டம் அமைக்கிறது, பராமரிப்புன்னு எல்லாம் செஞ்சு கொடுக்குறேன். கண்டிப்பா ஒருநாள் நான் சொந்தமா நிலம் வாங்குவேன்; பயிர் பண்ணுவேன்.

மண்ணை நேசிக்கிற என்னை எந்த நிலமும் கைவிடுமா என்ன?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us