PUBLISHED ON : அக் 11, 2026

‘என்ன செய்ய... 50 வயசுலதான் விவசாயத்தை வாழ்வியலா பார்க்குற பக்குவம் கிடைச்சது!’
தாத்தா, தந்தை வரிசையில் விவசாயம் செய்யாது, பி.காம்., முடித்து, நுாற்பாலையில் அலுவலராக சேர்ந்தவர் இந்த சுப்பிரமணியம். 25 ஆண்டுகள் பணிக்குப்பின், கடந்த 2000ம் ஆண்டு விவசாயத்திற்குள் நுழைந்திருக்கிறார் .
தக்கன பிழைக்கும்
எதிர்பாரா நேரத்து பெரு மழை, காட்டுப்பன்றிகள் தொல்லை... இதனால, வாழை சாகுபடியில நிறைய இழப்பு; ஆனா, அதிக மழைன்னாலும் குறைவான மழைன்னாலும் இந்த செங்காம்பு கறிவேப்பிலை தாக்குப் பிடிச்சு நிற்குது; ‘வாழ்க்கையோட கடினமான சூழல்களை கடந்து வர்றது எப்படி’ன்னு இந்த நிலமும் கறிவேப்பிலையும்தான் எனக்கு கற்றுக் கொடுக்குது!
கோவை, மேட்டுப்பாளையம் அருகிலிருக்கும் பெள்ளாதி கிராமத்தில், இரண்டு ஏக்கரில் வாழை, இரண்டு ஏக்கரில் செங்காம்பு கறி வேப்பிலை பயிரிடுகிறார் சுப்பிரமணியம். இங்குள்ள மண்வளம், சுற்று வட்டார 5,000 ஏக்கர்களில் செங்காம்பு கறிவேப்பிலையை அதன் தனித்துவ மணத்துடன் மிகச்சிறப்பாய் விளைவிக்கிறது.
ஜூன், ஜூலை மாதங்களில் செடிகள் தரும் விதைகளில் நாற்றுகள் வளர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கிறார் சுப்பிரமணிய ம்.
பொறுத்தார் பூமி ஆள்வார்
செங்காம்பு கறிவேப்பிலை நாற்றுகளோட பராமரிப்புக்கு மூணு மாதம்; அப்புறம், ஒரு ஏக்கருக்கு 6,000 செடிகள்னு இரண்டரை அடி இடைவெளியில நடவு பண்ணினா, 12வது மாதம் கறிவேப்பிலை பறிக்கிறதுக்கு தயாராயிரும். அப்புறம் மூணு மாதத்துக்கு ஒருதடவைன்னு 30 வருஷத்துக்கு பறிச்சுக்கலாம்.
முதல்ல சில ஆண்டுகள் ஏக்கருக்கு 1 – 2 டன் கிடைச்சது; போகப்போக, 4 – 5 டன் கிடைக்குது; சந்தையில கிலோ 4 ரூபாய்க்கு குறையலேன்னா நல்ல லாபம் நிச்சயம்.
செங்காம்பு கறிவேப்பிலைக்கு, ‘புவிசார் குறியீடு’ வழங்குமாறு விண்ணப்பித்து இருக்கின்றனர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அரங்கநாதர் உழவர்கள் உற்பத்தி யாளர் குழுவினர்; இங்கிருந்து, செங்காம்பு கறிவேப்பிலை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
நிலம் ஓர் உறவு
பார்த்துப் பார்த்து களை எடுக்குறது, மருந்து தெளிக்கிறது, கவாத்து பண்றது ன்னு, இந்த 76 வயசுலேயும் தினமும் என்னை பரபரப்பா இயங்க வைச்சிருக்கு இந்த நிலம். ஊர்ல சொட்டு நீர் பாசனம் இருந்தாலும், பாத்திகட்டி தான் நான் நீர் பாய்ச்சுறேன்.
இயற்கை விவசாயம் மேல ஆசை இருந்தாலும் பாஸ்பரஸ் சத்துக்காக டி.ஏ.பி., உரத்தையும், சுருட் டுப் புழுக்களை அழிக்க பூச்சிக்கொல்லியையும் தவிர்க்க முடியலை; வேர்கள் வளர்ச்சி, நுண்ணுயிரிகள் பெருக்கத்துக்காக பஞ்சகவ்யத்தை சீரான இடை வெளியில பாசன நீர்ல கலந்து விடுறேன்.
மகன் அமெரிக்காவுல இருக்குற தால, மனைவி காலமானதுக்கு அப்புறம் எனக்கு எல்லாமுமா இருக்குற உறவு இந்த நாலு ஏக்கர் நிலம்தான்; சமையலோட கடைசிகட்டத்துக்கு அவசியப் படுற கறிவேப்பிலை, முதுமையில இருக்குற என் வாழ்வையும் ‘கமகம’ன்னு வைச்சிருக்கு. என்னால முடிஞ்ச வரைக்கும் என் நிலத்தையும், இந்த விவசாயத்தையும் நான் ரொம்ப நல்லா பார்த்துக்கு றேன்.
