
செய்தி: 'இர ண்டு பெண் குழந்தைகள் திட்ட முதிர்வு தொகை' தராமல் நான்கு ஆண்டுகளாக அலைக்கழிக்கும் விருதுநகர் மாவட்ட சமூகநலத் துறை; கலங்கி நிற்கும் தந்தை!
நவம்பர் 30, 2025; நமது 'முதல்வரே ஒரு நிமிஷம்' பகுதியில், 'என் மகள் படிப்புக்குத் தான் என் பணம் உதவவில்லை... அவள் திருமணத்திற்காவது உதவுமா' என முதல்வரிடம் நியாயம் கேட்டிருந்தார் சிவகாசி, நாரணாபுரத்தைச் சேர்ந்த முனியராஜ்.
இச்செய்தி வெளியான அன்றே...
அரசு நடவடிக்கை: பலவித பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் அன்று தன் மகளுக்கு திருமணம் நடத்திக் கொண்டிருந்தவருக்கு, நண்பகல் 12:00 மணியளவில் சிவகாசி சமூகநலத் துறையிடம் இருந்து ஓர் அழைப்பு; விபரங்கள் பகிர்ந்ததும் மாலை 4:30 மணியளவில் மீண்டும் அழைப்பு; 'இரண்டு வாரத்தில் அந்த முதிர்வு தொகை வரவாகி விடும்' எனும் உத்தரவாதம் அழுத்தமாய் தரப்படுகிறது.
'சொன்னதைச் செய்தது' முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு. டிசம்பர் 10, 2025ல் முனியராஜின் மகள் மஞ்சுளாவிற்கு வரவேண்டிய முதிர்வு தொகையான ரூ.34 ஆயிரத்து 500 வங்கி கணக்கில் வரவானது.
முனியராஜின் நன்றி: முதல்வரே... நான்காண்டு போராட்டம் இது; தங்களுக்கும், தங்கள் தலைமைத் துவத்திற்கு பெருமை சேர்த்த நம் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பெரும் நன்றி. 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என செயலாற்றி வரும் 'தினமலர்' நாளிதழே... நீ தந்திருப்பது என் மகளுக்கான ஆசிர்வாதம்; மறக்க மாட்டேன்.

