PUBLISHED ON : செப் 06, 2026

புதிர் அவிழ்க்கும் புதுமை புதிர்
புதிராய் ஒரு கொலை; புதுமை புதிராய் உதவி காவல் ஆய்வாளரான பபிதா சிங். அப்பாவின் மரணத்தால் கருணை அடிப்படையில் காவல் துறை பணிவாய்ப்பு பெறும் பபிதா, பணி மீது கொண்ட காதலால் துப்பறிய விரும்புகிறார். பள்ளிகாலத்து நண்பனின் அகால மரணம் அவரது விருப்பத்திற்கு பாதை அமைத்து தருகிறது!
பபிதா நடக்கையில் நமக்கு மூச்சு வாங்குகிறது; சத்துள்ள தன் பாத்திரத்திற்கு சதை தேவைப் படுவதை உணர்ந்து, உண்டு, உடல் பெருத்து, கலைக்கு பெருமை சேர்த்திருக்கும் நிமிஷா சஜயன் இல்லையெனில், பபிதா வெறும் பூஜ்ஜியம்!
போகிறபோக்கில் உடல் பருமனை நாத்தனார் கேலி செய்யும் காட்சியில், கரையேறாது நிற்கும் படகில் பபிதா; கரையோரத்து அலைகளில் தள்ளாடும் படகு போல் அவர் மனம்; எய்யப்பட்ட 'கேலி' அம்பை தன் ஒற்றைப் பார்வையில் முறித்துப் போட்டு அவர் கரையேறும் அழகை, துளியும் சிந்தாது அள்ளியிருக்கிறார் இயக்குனர். இப்படியாக அவர் அள்ள, 'க்ளைமாக்ஸ்' வரை திரைக்கதையில் பல வாய்ப்புகள்!
'பெண்தானே...' என ஒடிக்க நினைக்கும் உயர் அதிகாரியின் ஆதிக்கம், உடல் தேவை முடிந்ததும் உடனடியாய் 'குறட்டை' விடும் கணவனின் அர்த்தமற்ற அன்பு, 'தாய்மை' அடையும் வாய்ப்பை தள்ளிப் போடும் 'தைராய்டு' பிரச்னை, குற்றவாளிகளை நெருங்குவதற்கு இடையூறாய் இருக்கும் அச்சம்... இத்தனையையும் பக்குவமாய் கடந்து தன் நண்பனின் கொலைக்கு காரணமானவர்களை பபிதா கண்டறிய வேண்டும்!
சந்தேகத்திற்குரிய ஒவ்வொரு நபரும் பபிதா நம்பும்படியாக ஒரு பொய் சொல்லி சந்தேக வளையத்தினுள் இருந்து வெளியேற, 'அவன் செத்ததுக்கு யார்தான்டா காரணம்' என பபிதா அழும்போது, 'எதை 'காதல்' என்கிறது இந்த பெண் மனம்' என்பதும், 'அம்மனம் உணர்வது காதலா' எனும் கேள்வியும் எழுகிறது.
இந்த கதையில் பபிதா கண்டு பிடித்ததை விட, பபிதா நமக்கு உணர்த்திய அனைத்தும் அதீதமாய் ருசிக்கின்றன.
ஆக...
'முண்டாசு பாரதி இருந்திருந்தால் என்னை கொண்டாடி இருப்பார்; நீ பாரதியா' என்கிறார் பபிதா
