PUBLISHED ON : செப் 06, 2026

'உனக்கு என் கையிலதான்டா சாவு'
பல திரைப்படங்களில் வில்லனைப் பார்த்து நாயகன் பேசும் இவ்வசனத்தை, இதில் நாயகன் தனது கரத்திடம் சொல்கிறான்; படத்தில் ஒரு ஆச்சரியம் இருப்பதாக துல்கர் சல்மான் சொன்னது இதைத்தான் போலும்!
'உன் வாழ்க்கை உன் கையில்' என்பதன் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டு, டேன் சூதாட்டத்தில் பகடை உருட்டு கிறான். ஒரு விபத்தின் விளைவாய், அவனுக்கு 'கை மாற்று அறுவை சிகிச்சை' நடக்கிறது. இதற்குப்பின், அவனது வலது கரம் மூளையின் கட்டளைப்படி இயங்க மறுக்கிறது. தன்னிச்சையாக இயங்கும் அக்கர மே அவனுக்கு வில்லன்... எதனால்?
'மூன்றாண்டு இடைவெளிக்குப்பின் வெளியாகும் துல்கரின் நேரடி மலையாள திரைப்படம்' என்பதால், இதை உஸ்தாத் ஹோட்டல், சார்லி வகை படைப்பாக எதிர்பார்த்தால் ஏமாற்றமே; ஆனால், 'மாயாஜாலம், த்ரில்லர், ஆக ் ஷன்' என ஒரு 'மிக்ஸ்டு பிரைட் ரைஸ்' தந்திருக்கிறார் துல்கர்!
தனது வலக்கரத்தை ஒரு தனித்த பாத்திரமாக கருதியபடி, அதற்கு நேரெதிரான பாவங்களை வெளிப்படுத்தும் துல்கரின் நடிப்பு படத்தின் துாண். நாயகனின் வலக்கரம் - இடக்கரம் முரண்பாட்டை சண்டை காட்சிகளில் பயன்படுத்தியவிதம், விறுவிறுப்பாக 'வீடியோ கேம்' விளையாடும் உற்சாகத்தை தருகிறது!
'இந்த சூழ்நிலையில் அந்த கரம் செயல்படுமா... இல்லை, அது துண்டிக்கப்படுமா; இறுதியில் அந்த காதலி இக்கரத்தை முத்தமிடுவாளா' என்று, அக்கரத்தின் மீது நம் உணர்ச்சியை குவிய வைத்த வகையில் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் வென்றுள்ளார்.
காட்சிகள் வழியே பனி, மழை, கடல், பசுமை என மனதை ஆற்றுப்படுத்தும் மலையாள திரைப்படங்களுக்கு மத்தியில், சொகுசு கார்கள், ஆடம்பர மாளிகை, கேளிக்கை விடுதிகள் என பாலிவுட்டின் தயாரிப்புக்கு சவால் விட்டிருக்கின்றனர்.
தரமிக்க தயாரிப்பு, சிறந்த பொழுதுபோக்கிற்காக இதை ரசி க்கலாம்.
ஆக..
அரசியல் 'கை'யுடன் ஒப்பிடுகையில் இந்த 'கை' மிகச்சிறப்பாக செயல்படுகிறது மக்களே
