
ஏமாறுவதில் இத்தனை சுகமா?
கட்டிலில் சட்டை பட்டன் கழன்ற நிலையில் மம்மூட்டி; அருகில், 'வெனிலா' ஐஸ்கிரீம் போல், 'ஜில்'லென்று ஓர் அழகி; 'இன்னும் அள்ளிப் பருகுவார்' என்று உருகி வழியும் அந்த ஐஸ்கிரீம், மம்மூட்டியிடம் ஏமாறுவதில் துவங்குகிறது 'மூச்சடைக்கும்' கணக்கு!
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரப் படத்தில், மம்மூட்டி வரும் காட்சிகளை மட்டும் கோர்த்தால் அதிகபட்சம் ஒரு மணி நேரம் தாண்டாது; அவ்வளவுதான்! 'மம்மூட்டி பாத்திரம் இந்த பெயரில் இன்னாருடன் இப்போது பேசிக் கொண்டிருக் கிறது' என்று நம்ப வைத்து, ஒவ்வொரு முறையும் நம்மை ஏமாற்றும் படத்தொகுப்பும், திரைக்கதையும் இப்படைப்பின் தாய் - தந்தை!
'இவன்தா ன் கொலைகாரன்' என்று எடுத்த எடுப்பிலேயே நமக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அவனைத் தேடுவதாய், அதுவும் அவன் உதவியுடன் அவனைத் தேடுவதாய் திரைக்கதை அமைத்து, 'இவன் சிக்கவே மாட்டான்' என்று நம்மை நம்ப வைத்து, அவன் சிக்கிக் கொண்டதும் நம் ஏமாற்றத்திற்கு நம்மையே கைதட்டி ஆர்ப்பரிக்க வைத்து... 'மேஜிக்' செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜிதின் கே.ஜோஸ்.
'சிறுமியான 10 வயது மகளோடு கூட தோற்று விடக்கூடாது' என நினைக்கும் காவல் அதிகாரியாய் விநாயகன்; யானையின் கம்பீரத்திற்கு இணையான ஒவ்வொரு செயலிலும் அகந்தை அற்ற தன் அகத்தை பிரதிப லிக்கிறார்; பாகனாய் அவர் பாத்திரத்தை அணுகினால் பெரும் சிலிர்ப்பு நிச்சயம்!
'பல பெண்கள் என்ன ஆனார்கள்' என்று தேடும் கதை; 'இப்படித்தான் எல்லாருக்கும் நிகழ்ந்திருக்கும்' என்று துவக்கத்திலேயே நம்ப வைத்து, 'இல்லை... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி நிகழ்த்தினான்' என்று பலப்பல 'திடுக்' உண்மைகள் மூலம் நம்மை நன்கு ஏமாற வைத்து, இறுதியில் விநாயகன் பாத்திரத்திற்கு இக்கதை வெற்றி நீட்டுகிறது.
ஆனால், நமக்குள் ஜெயித்திருப்பதோ... மம்மூட்டி எனும் மகா கலை ஞன்.
த்ருஷ்யம் 2 விடம் இருந்து திருடிய ஒரே ஒரு காட்சியை மன்னித்து விட்டால் இது 'அக்மார்க்' த்ரில்லர்

