PUBLISHED ON : டிச 07, 2025

இன்றைய நம் நேரலையில் சிறப்பு விருந்தினராக பேட்டி அளிப்பவருக்கு, இந்திய தேசத்தில் ஏன் உலக அரங்கிலேயே அறிமுகம் தேவையில்லை!
வணக்கம் அய்யா...
வணக்கம்!
உங்க ஆட்சியில நம்ம மக்களுக்கு ஏமாற்றமும் அதிருப்தியும் இருக்குறதா பேசிக்கிறாங்களே... (இந்த இடத்துல வழக்கமா ஒண்ணு சொல்லணுமே... ஆங்...) இதை எப்படி பார்க்குறீங்க?
என்ன தம்பி கேட்குறீங்க... 'மழைநீர் வடிகால் பணி'ன்னு ரோடு முழுக்க தோண்டி, மாசக் கணக்குல புழுதி பறக்க வைச்சோம். முகத்தை மூடிக்கிட்டு பயணப்பட்ட அந்த நாட்களை மறந்துட்டு, தேங்குன மழைநீரை இன்னைக்கு நாங்க மோட்டார் வைச்சு வேகமாக உறிஞ்சுறதை மக்கள் பாராட்டுறாங்க தம்பி! நீங்க நம்ம சானலை பார்க்குறதில்லையா?
அய்யா... பார்க்குறேங்கய்யா... நான் சும்மாகாச்சுக்கும் கேட்டேன்; நாம அடுத்த கேள்விக்கு போயிரலாம்; 'மக்களோட வாக்குகளை காப்பாத்துறோம்னு பேசுறீங்களே... கொடுத்த வாக்குறுதிகளை காப்பாத்திட்டீங் களா'ன்னு நீங்க சொன்ன அதே மக்கள் கேட்குறதா தகவல் வருதே...
தம்பி... 500 வாக்குறுதிகளுக்கு மேல அள்ளி வீசுறப்போ, 'மாதத்தோட முதல் வேலைநாள்ல ஊடகங்களை சந்திச்சு வாக்குறுதிகளோட நிலை என்னன்னு சொல்றோம்'னு, அப்படி இப்படி தலைவருங்க வாய்ல வரத்தான் செய்யும்; பாருங்க... இவ்வளவுநாள் ஆயிருச்சு... இதை கேட்க வேண்டிய உங்கள்ல யாராவது அதுசம்பந்தமா கேள்வி கேட்டி ருக் கீங்களா; உங்களுக்கே இவ்வளவு மறதி இருக்குறப்போ, 'மக்கள் அதை கேட்குறாங்க... இதை கேட்குறாங்க'ன்னு எதையாவது உருட்டி விடாதீங்க தம்பி!
அருமையா சொன்னீங்கய்யா... அடுத்த கேள்விக்கு போயிரலாம்! பழுத்த அரசியல் வாதியா சொல்லுங்க... 1967 தேர்தல்ல தி.மு.க.,வோட வெற்றிக்கு காரணம்னு நீங்க நினைக்கிறது, 'ரூபாய்க்கு மூணு படி அரிசி'ங்கிற அண்ணாதுரையோட பிரசாரமா, இல்ல... குண்டடி பட்ட நடிகர் எம்.ஜி.ஆர்., தன் கழுத்துல பெரிய கட்டோட வாக்காளர்களை கும்பிடுற மாதிரி அண்ணாதுரை வெளியிட்ட புகைப்படமா?
ம்ம்ம்... புரியுது தம்பி... 'அரசியலுக்கு வந்திருக்கிற நடிகர் விஜய்க்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா'ன்னு இந்த அரங்கநாதர் மூலமா தெரிஞ்சுக்க விரும்புறீங்க! சரி... சொல்றேன்... அதுக்கு முன்னாடி என்னைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க!
அய்யா... அது... அது வந்து... 'மழைநீர் வடிகால்' இருந்தும் முழங்கால் வரைக்கும் தேங்கி நிற்கிற மழைநீரை, மோட்டார் வைச்சு வேகமா உறிஞ்சுறது எல்லாம் ரொம்ப பெரிய சாதனைங்கய்யா!
அபாரம் தம்பி... அபாரம்; எவ்வளவு நேர்த்தியா அழகா பதில் சொல்லிட்டீங்க! ஆமா... அது என்ன கேள்வி கேட் டீங்க... ஆங்... ஜோசப் விஜய்...
இல்லீங்கய்யா... வேண்டாம்; அந்த கேள்விக்கு பதில் உங்க கேள்வியில கிடைச்சிருச்சு... போதும்!
ஹா... ஹா... நீங்க நல்லா வருவீங்க தம்பி; பேட்டி ரொம்ப 'நேர்மையா' இருந்தது; நன்றி!
நன்றிங்கய்யா.

