PUBLISHED ON : ஜன 18, 2026

அவன் உன்னை அடிச்சான்னு நீ சொல்றதை நம்புறது எப்படி... சாட்சி யாரு?
அய்யா... நான் பார்த்தனுங்க!
என்ன பார்த்த தாயி; 'புதுக்கோட்டை கர்ணேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், இந்த ஆட்சி நடத்துற 4,000மாவது கும்பாபிஷேகம்'னு அமைச்சர் சேகர்பாபு சொன்னதை நம்புன உன் வூட்டுக்காரன், 'ஆக்கிரமிப்புன்னு சொல்லி இந்த அரசு இடிச்சதுல, திருப்பூர் பெருமாநல்லுார் முருகன் கோவில் எத்தனையாவது கோவில்'னு கேட்டதை நீ பார்த்தியா?
இல்லீங்க... அந்த கிரகம் புடிச்சவன் மூளைக்காரனாட்டம் இப்படியெல்லாம் கேட்க மாட்டானுங்க!
ம்ஹும்... அப்ப உன் சாட்சி செல்லாது... செல்லாது!
தாத்தா... நான் பார்த்தேன்...
நீ என்றா கண்ணு பார்த்தே...?
பராசக்தி படம் பார்த்துட்டு கண்ணு சிவக்க வந்த இந்த மாமா, 'நம்ம புள்ளைங்களுக்கு ஹிந்தி கத்துக் கொடுக்கக்கூடாது அம்மணி'ன்னு இந்த அக்காகிட்டே சொன்னாரு. அதுக்கு அக்கா...
'ஏனுங்க... ஹிந்தியை அண்ணாதுரை தீவிரமா எதிர்த்துட்டு இருந்த நேரத்துல, 'ஹிந்தி கத்துக்க மூணே மாசம் போதும்'னு மொரார்ஜி தேசாய் சொன்னப்போ, 'ஆமா... மூணு மாசத்துக்கு மேல கத்துக்க அதுல என்ன இருக்கு'ன்னு நம்ம அண்ணாதுரை கேட்டாரா... இல்லீங்களா...'ன்னு கேட்டுச்சு!
மாமாவுக்கு பதில் தெரியலை; முழிச்சுக்கிட்டே நின்னாரு! மறுபடியும் அக்கா, 'மூணு மாசத்துல கத்துக்குற மொழி நம்ம மொழியை அழிச்சிரும்னு நினைக்கலாங்களா; 'த.வெ.க., வந்து தி.மு.க.,வை அழிச்சிரும்'னு நினைக்கிறதே அபத்தமில்லையா'ன்னு கேட்டுச்சா... மாமா அக்காவை அடிச்சிட்டாரு!
அட கருத்தில்லாத பயலே... ஏன்டா அவளை அடிச்சே... அவ திருப்பி உன்னை எத்துனா நீ தாங்குவியாடா; ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் உன்னை ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன்டா!
நாட்டாமை... தீர்ப்பை மாத்தி சொல்லு!
முடியாதுடா... அந்த 3,000 ரூவா காசுல உன் உறவுக்கு பார்ட்டி வைச்ச நீ எனக்கு வைச்சியாடா; இப்போ சரின்னு சொல்லு... மாத்தி சொல்றேன்; எனக்கு தீர்ப்பு முக்கியமில்லடா... உன் காசுடா... சரக்குடா... சைட் டிஷ்ஷுடா...
த்துா... நீயெல்லாம்... வா... வந்து தொலை.

