PUBLISHED ON : டிச 28, 2025

செய்தி: வெயில் தாளாது மயங்கி உயிரிழந்த மதுரை மாநகராட்சியின் தொகுப்பூதிய துாய்மை பணியாளர்!
அநீதி: எட்டு மாதங்கள் கடந்தபின்னும் எவ்வித நிவாரணமும் வழங்காத அரசு நிர்வாகம்!
முதல்வரே... நாகனாகுளம் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் நான் மணி; மதுரை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்; என் கணவரான 55 வயது மணிவேல், மதுரை மாநகராட்சியில் 30 ஆண்டுகளாக துாய்மை பணியாற்றியவர்; இன்று அவர் உயிரோடு இல்லை!
கடந்த ஏப்ரல் 26ம் தேதி காலை, மாநகராட்சி மண்டலம்: 1, வார்டு எண்: 5ல் துாய்மைப்பணி செய்து கொண்டிருந்தவர் கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்து மரணித்து விட்டார். 'வெயில் தாக்கம் காரணமாய் விழுந்து பின்னந்தலையில் அடிபட்டதே இறப்பிற்கு காரணம்' என, டி1 தல்லாகுளம் காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண்: 539ல் பதிவாகியது. வார்டு கவுன்சிலர் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை தந்துவிட்டு போனார்.
என் கணவர் தொகுப்பூதிய ஊழியர் என்பதால் அவரது இழப்பிற்கு பின் பணப் பலன்கள் இல்லை என்பதாலும், இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமையில் நான் இருப்பதாலும், முதல்வர் நிவாரண உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தேன்; இப்போது வரை பலனில்லை.
முதல்வரே... உங்கள் அரசு நிர்வாகத்தின் நற்பெயருக்காக உழைக்கும் எங்களோடு, உணவு மட்டும்தான் பகிர்ந்து கொள்வீர்களா; எங்களது துயரத்தில் பங்கு கொள்ள மாட்டீர்களா?

