PUBLISHED ON : ஜன 11, 2026

செய்தி: ஆட்டோ மீது முறிந்து விழுந்த பனை மரம்; உடல் நசுங்கி ஓட்டுநர் பலி!
அநீதி: ஆறுதல் சொல்லாமலும் நிவாரணம் தராமலும் மவுனம் காக்கும் தமிழக அரசு!
முதல்வரே... 37 வயது கணவர் அப்துல் வாஹீத், 10 வயது மகள், மூன்று வயது மகனோடு சென்னை, தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் சந்தோஷமாக வசித்து வந்த நான் 32 வயது சிரின் பானு.
இப்போதும் அங்கேதான் வசிக்கிறேன்; ஆனால், சந்தோஷமாக இல்லை; காரணம், ஆட்டோ ஓட்டுநராக இருந்த என் கணவர் இப்போது உயிரோடு இல்லை. இதற்கு காரணம்... அரசு நிர்வாகத்தின் அலட்சியம்.
கடந்த நவம்பர் 22ம் தேதி மதியம் 1:30 மணியளவில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை வளாக பனைமரம் முறிந்து வெளியே சாலையில் விழுந்ததில், என் கணவரது ஆட்டோ சிதைந்து அவர் பலியாகி விட்டார். ஜி5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது.
நிகழ்ந்த சம்பவத்தை மனசாட்சியே இன்றி 'விபத்து' என்றது உங்கள் அரசு. 'கரையான் அரித்திருந்த மரத்தை அகற்றாமல் இருந்தது நிர்வாக அலட்சியம்' என்கிறது என் மனது! உண்மை அறிந்தபின்னும் அரசு தரப்பில் இருந்து எவ்வித ஆறுதலும், நிவாரணமும் இல்லை. 'பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு நீதி வேண்டும்' என ஒரே ஒரு அரசியல் கட்சி குரல் எழுப்பியதோடு சரி!
வாழ்வதற்கு வருமான மின்றி கேட்கிறேன்; முதல்வரே... நீங்கள் நிர்வகிப்பது 'சிறுபான்மை யினர் நலன் காக்கும் அரசு'தானே?

