PUBLISHED ON : ஏப் 26, 2026

செய்தி: அரசு ஆசிரியர்கள் அலட்சியம்; கல் தாக்கி கருவிழி பாதிப்புற்ற மாணவன்!
அநீதி: உரிய சிகிச்சை தராது ரூ.50 ஆயிரம் நிவாரணத்தோடு ஒதுங்கிக் கொண்ட அரசு!
முதல்வரே... ஒரு பிரச்னையை முழுமையாக தீர்க்காத அரசு சிறந்த அரசா?
நாங்கள் விவசாய கூலிகளான பாரதிதாசன் - பார்வதி; அரியலுார், கண்டராதித்தம் கிராமத்தில் வசிக்கும் எங்களது 14 வயது மகன் ஆகாஷ், அரசுப் பள்ளி மாணவன்; ஆகஸ்ட் 21, 2024ல் சக மாணவன் விளையாட்டாக வீசிய கல் எனது மகனின் இடது கருவிழியை பதம் பார்த்துவிட்டது.
விஷயமறிந்த ஆசிரியர்கள் உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாததால், மாலை வீடு திரும்பியவன் வலியால் துடித்தான். சோதித்துப் பார்த்த மதுரை தனியார் மருத்துவமனை, 'கருவிழி பாதிப்பு' என்றது. விடியலில் அறுவை சிகிச்சை நிகழ்ந்தது எனினும் அவனது பார்வை சீராகவில்லை.
'மேல் சிகிச்சை, இழப்பீடு கோரி ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், பள்ளி கல்வித்துறை, முதல்வர் தனிப்பிரிவு வரை மனு (எண்:12931147) அனுப்பியதன் பலனாக, மாவட்ட கல்வி அலுவலர் விசாரித்து, முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்.
நவம்பர் 10, 2025ல் ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை கிடைத்தது. 'இடமாற்றம்' எனும் தண்டனை ஆசிரியர்களுக்கு கிடைத்ததாக செய்தி வந்தது. ஆனால், தலைவலியாலும், கண்ணில் நீர் வடியும் பிரச்னையாலும் அன்றாடம் அவதியுறும் என் மகனது துயரம் வடிந்தபாடில்லை.
'அரசுப்பள்ளி மாணவன்தானே' எனும் அலட்சியமா முதல்வரே?

