PUBLISHED ON : மே 17, 2026

செய்தி: சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்; பறிபோன அப்பாவி வாகன ஓட்டியின் உயிர்!
அநீதி: 'பைக் ரேஸ் காரணமல்ல; பைக்கின் திறன் அறியாததால் நிகழ்ந்த விபத்து'- காவல் துறை அறிக்கை
முதல்வரே... நான் ராஜவேணி; '49 வயதான என்னையும், 13 மற்றும் 4 வயதுடைய இரு பெண் குழந்தைகளையும் தவிக்கவிட்டு என் கணவர் காலமானதற்கு, முந்தைய தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்' என்கிறேன்.
நவம்பர் 5, 2025; இரவு 10:45 மணி; சென்னை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பால மையப்பகுதியில், அண்ணாசாலையில் இருந்து புதுக்கல்லுாரி நோக்கி அசுர வேகத்தில் வந்த இரு பைக்குகள், எதிர்திசையில் வந்த என் கணவரின் பைக் மீது மோத, சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார்.
மூன்று சட்டப்பிரிவுகளில் இதனை விபத்தாக பதிவு செய்த தமிழக காவல் துறை, 'நிகழ்ந்தது 'பைக் ரேஸ்' அல்ல; அதிவேக பைக்கை அஜாக்கிரதையாக இயக்கியதால் நிகழ்ந்த விபத்து' என புதிரான விளக்கம் அளித்து கடமை முடித்துக் கொண்டது. சரி, நிகழ்ந்தது 'பைக் ரேஸ்' அல்ல எனில்...
* விபத்திற்கு காரணமான இளைஞர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்த 'பைக் சாகச ரீல்ஸ்'களுக்கு தமிழக காவல் துறை தரும் விளக்கம் என்ன?
* அச்சம்பவத்திற்குப் பின், 'மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக வாகன செயல்திறன் மேம்படுத்தும் கடைகளை தொடர்ந்து கண் காணிக்கிறோம்' என காவல்துறை சொல்லியது ஏன்?
முதல்வரே... எனக்கு நீதி வேண்டும்; உங்களின் நல்லாட்சி எனக்கான நீதியில் இருந்து துவங்குமா?
