PUBLISHED ON : நவ 15, 2026

அன்பு மகன் ஜோசப் விஜய்க்கு...
செய்தி: அதிவேகமாய் வந்த மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி கை எலும்பு முறிவு!
அநீதி: 'முதல்வர் விபத்து நிவாரண நிதி'க்கு விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகள் கடந்த தவம்!
எங்கள் முதல்வரே... திருநெல்வேலி அம்பா சமுத்திரம், வெள்ளங் குழி கிராமத்தில் வசிக்கும் நான் 83 வயது கடந்த மா.சங்கரம்மாள். என் கணவரை இழந்து ஒன்பது ஆண்டுகளான சூழலில் மகனுடன் வசித்து வருகிறேன்.
செப்டம்பர் 24, 2024 அன்று, மாலை 6:00 மணியளவில் திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் நான் நடந்து சென்ற போது, அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் என் மீது மோதியது; இவ்விபத்தில், எனது வலது தோள்பட்டை எலும்பு முறிந்தது.
வீரவநல்லுார் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை எண்:501/2024ன் கீழ், 'மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, அலட்சியத்தால் காயம் ஏற்படுத்துவது' எனும் 125(ஏ) மற்றும் 281 பி.என்.எஸ்., சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவானது!
சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்ட நிலையில், 'முதலமைச்சர் விபத்து நிவாரண நிதி' கேட்டு, உரிய ஆவணங்களோடு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உடனடியாய் மனு அளித்தேன். அடுத்து, 'முதல்வரின் முகவரி' பிரிவுக்கும் மனு அனுப்பினேன்.
சாலை விபத்து பதிவேட்டின் பதிவுமூப்பு வரிசை எண்.14/2025ல் என் மனு பதிவு செய்யப்பட்டதாக, சேரன் மகாதேவி சார் ஆட்சியர் கையொப்பத்துடன் ந.க.எண். அ1/455/2025 குறிப்பிட்டு, ஜூன் 27, 2025ம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. அன்று முதல் இப்போது சென்றாலும், 'விரைவில் வந்துவிடும்' என்றே அரசு தரப்பு சொல்கிறது.
'நான் உங்கள் மகன்' என முழங்கும் எங்கள் முதல்வரே... 83 வயது அன்னையை இப்படி காத்திருக்க வைப்பது முறையா?
98654 11980
