
'மூத்த அரசியல்வாதி என்பதால் நான் யாரை வசைபாடினாலும், பின் அவரையே உயர்த்திப் பிடித்தாலும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வர்' எனும் நம்பிக்கையுடன் நடைபோடும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவிடம் பதில் கேட்கி றது தமிழகம்...
1. 'தங்களது சமத்துவ நடைபயணம் கஞ்சா, போதை மருந்து இவற்றோடு 'டாஸ்மாக்' மதுவிற்கும் எதிரானதுதானே என மக்கள் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்' என நம் முதல்வர் தங்களை உஷார்படுத்தி இருக்கிறாரா?
2. 'மதுவிலக்கு ரத்து செய்தால் வருவாய் வரும்; ஆனால், தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் மனிதன் அலைவானே' என்று ஏப்ரல் 12, 1968ல் வருந்திய அண்ணாதுரையின் பாதையிலா இந்த ஆட்சி நடக்கிறது?
3. தரம் கண்டறியும் பல கேள்விகளுடன் தாங்கள் நடத்திய நேர்காணலுக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்களுடன் பயணிக்க இருக்கும் 950 பேரில் யார் ஒருவருக்கும் மதுப்பழக்கம் கிடையாது என்று தங்களால் சொல்ல இயலுமா?
4. 'மதுவிலக்கு குறித்து பரிசீலிப்பதாக கூறினேனே தவிர, இத்தனை நாளில் கொண்டு வருவதாக சொன்னேனா?' - இது, முதல்வராக ஆகஸ்ட் 24, 2010ல் கருணாநிதி சொன்னது; இதை நாங்கள் மறந்திருப்போம் என நம்புகிறீர்களா?
5. 'தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் நிகழ்ந்த அத்தனை குற்றங்களுக்கும் கஞ்சா, போதை மருந்து பழக்கம்தான் காரணமே தவிர, எவ்வகையிலும் 'டாஸ்மாக்' மது காரணமல்ல' என்று தங்கள் மனசாட்சி சொல்கிறதா?
6. 'பாசிச பா.ஜ., அரசு' என இடைவிடாது கோஷமிடும் நீங்கள், ஆகஸ்ட் 30, 1971ல் கருணாநிதியின் தி.மு.க., அரசு செயல்படுத்திய 'மதுவிலக்கு ரத்து' முடிவை, காமராஜர் போல் 'பாசிச கொள்கை' என இன்னும் விமர்சிக்காதது ஏன்?
7. 'இனத் துரோகிகள்' என சொல்லி விட்டு அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கும் நீங்கள், 'கரூர் துக்க வீட்டினரை விஜய் சென்னைக்கு வரவழைத்தது குற்ற உணர்ச்சியற்ற செயல்' எனச் சொல்வதை எந்த 'குடி'மகன் ஏற்பான்?
7 ½ ஜனவரி 13ம் தேதி விடியலில் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இருக்காதா?

