
'ஆட்சியில் இருக்கையில் உதயசூரியனின் இளஞ்சூட்டையும், எதிர்க்கட்சி வரிசைக்கு வந்துவிட்டால் உச்சிப் பொழுதின் உக்கிரத்தையும் உமிழ்வது தி.மு.க.,வின் வழக்கம்' என்பது தமிழக அரசியல் களம் உணர்ந்தோரின் அனுபவம். மீண்டும் தி.மு.க.,வை உச்சிக்கு ஏற்ற காத்திருக்கும் அதன் தலைவருக்கு சில கேள்விகள்...
1 'இரு தொகுதிகளில் ஜோசப் விஜய்யும், 108 தொகுதிகளில் த.வெ.க.,வும் தனித்து வென்றதற்கு, 'விஜய்' எனும் நடிகர் மீதான கவர்ச்சியும், மக்களின் 'சினிமா மோகம்' மட்டுமே காரணம்' என இன்னும் நம்புகிறீர்களா?
2 'த.வெ.க., ஆட்சியமைக்க தி.மு.க., இடையூறு செய்யாது' என்று சொல்லி ஜனநாயகத்திற்கு 'சல்யூட்' வைத்த நீங்கள், த.வெ.க.,விற்கு ஆதரவு தர உங்கள் கூட்டாளிகள் காலம் தாழ்த்தியபோது என்ன சொல்லி கண்டித்தீர்கள்?
3 'பெண்களுக்கு மாதம் ரூ.2,500 தருவது அத்தனை சுலபமான காரியமல்ல' என இன்று சொல்லும் நீங்கள், இதனை த.வெ.க., எதிர்ப்பு பிரசாரமாக முன் வைக்காதது ஏன்; விஜய் ஜெயிக்க நீங்களும் ஒரு காரணம் தானே?
4 'பா.ஜ., வளர்ந்துவிட கூடாது' என்பது தமிழக நலன் மீதான தங்களின் பிரதான கவலை எனில், 'த.வெ.க., பெரும்பான்மைக்கு தி.மு.க., வெளியில் இருந்து ஆதரவு தரும்' எனும் நிலைப்பாடு எடுக்காது ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்?
5 'அரசியல் நாகரிகம்' பற் றி தமிழகத்திற்கு அடிக்கடி வகுப்பெடுத்த அனுபவமிகு அரசியல் ஆசிரியரே... 'வெற்றி பெற்ற த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய்க்கு என் வாழ்த்துகள்' என்று ஏன் இன்னும் நீங்கள் உச்சரிக்கவில்லை?
6 'மத்திய, மாநில ஆட்சிகளில் கறைபடியா கட்சி' என பெயரெடுத்தது உங்களது முன்னாள் தோழனான காங்கிரஸ்; 'இதனோடு கை குலுக்கி இருக்கும் த.வெ.க., ஊழலை முற்றிலும் ஒழிக்கும்' என்று சொன்னால் நம்புவீர்களா?
7 'தோல்வியில் மு.க.ஸ்டாலின் துவள்வது இல்லை' என்பதை நிறுவிய தங்களது கொளத்துார் ஊர்வலத்தில், 'அழக்கூடாது' என மக்களை தேற்றிய நீங்கள், தங்கள் அருகில் நின்று தேம்பியவரை தேற்றாததன் அரசியல் காரணம் என்ன?
7 ½ 'வாரிசு அரசியல்' இனி முளைக்குமா?

