PUBLISHED ON : ஜன 11, 2026

திருப்பத்துார், வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பகுதியில் சிறிய மளிகை கடை நடத்தி வரும் ஆரோக்கிய மேரியின் வாழ்வை, 'கடை துவக்கும் முன் - கடை துவக்கிய பின்' என இருவேறாகப் பிரிக்கலாம்.
தற்போது 54 வயதில் இருக்கும் ஆரோக்கியமேரி,கடை துவக்கிய 2008 முதல் தற்போது வரையிலான 18 ஆண்டுகளாகத்தான் மனம் விட்டு சிரிக்கிறார்;விருப்பம் போல வெளியில் செல்கிறார்; இப்படி, நினைத்ததைப் பேசுகிறார்...
என் திருமண வாழ்க்கை ஆரம்பமான 21 வயசுல இருந்து அந்த உறவு முறிஞ்ச 37 வயசு வரைக்குமான கால கட்டத்துல, துாக்கம் வராத இரவுகள்ல, இப்படியெல்லாம் நான் நினைச்சிட்டு இருந்திருக்கேன்...
* நம்ம வீட்டுல மது பாட்டில்களும், சிகரெட் புகையும் இல்லாம இருந்திருந்தா, இரண்டு பொண்ணுங்களையும் பையனையும் ஹாஸ்டலுக்கு அனுப்பி படிக்க வைக்காம பக்கத்துலேயே வைச்சிருந்து அவங்க வளர்றதைப் பார்த்து ரசிச்சிருக்கலாம்!
* ஏழாம் வகுப்போட படிப்பை நிறுத்தாம, அக்கா, தங்கச்சி
மாதிரி அடுத்தடுத்து படிச்சு சொந்தக்கால்ல நாம நின்று இருந்தா இந்த அவதுாறு, வெறுப்பு எல்லாத்தையும் தவிர்த்திருக்கலாம்!
* இந்த வேலையாலதான் உங்க வீட்டுல அடிக்கடி சண்டை வருது; இதை விட்டிரு மேரி'ன்னு நாலு பேர் சொன்னதைக் கேட்டு நமக்கொரு அடையாளம் தந்த மகளிர் சுயஉதவிக் குழுவை கலைச்சிருக்க வேணாம்!
இப்படி யோசிச்சுட்டு இருந்த எனக்கு, 37 வயசுக்கு மேல வாழ்க்கை தந்த அனுபவங்கள் என்னென்ன தெரியுமா?
* 16 ஆண்டுகளா அம்மா வீட்டுக்கு வந்துட்டு திரும் புறப்போ, 'இன்னைக்கு என்ன நடக்குமோங்கிற பயத்துல என் அடிவயிறு பிசையும். உறவு முறிஞ்சதுக்கு அப்புறம், எந்த
பயமும் இல்லாம, 'என் வீட்டுக்கு நான் போறேன்'ங்கிற மகிழ்ச்சியோட வீட்டுக்கு திரும்புன அந்த முதல் நாளை என்னால மறக்கவே முடியாது!
* நான் 2021ல் மறுபடியும் ஆரம்பிச்ச சிறுமலர் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு, 2023ல் தமிழக அரசோட 'மணி மேகலை விருது' கிடைச்சது. என்கிட்டே அனுதாபமா பேசுனவங்களை, சாதிச்சுட்டே மேரி'ன்னு இந்த விருது சொல்ல வைச்சது; என்னை ஒரு தன்னம்பிக்கை மனுஷியா வெளியுலகத்துக்கு இந்த விருது காட்டுச்சு!
* எங்க மகளிர் குழு உறுப்பினர்கள் கடந்த ஆண்டு சென்னைக்கு சுற்றுலா போனப்போ, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குப் போனோம். அங்கே ஒரு பெண் குழந்தை என் கன்னத்துல தந்த முத்தம்; ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் அன்போட ஈரம் உணர்ந்தேன்!
'சிறுமலர் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் விமானத்தில் பறந்து பார்க்க வேண்டும்' என்பது ஆரோக்கியமேரியின் நீண்டநாள் ஆசை. வெகு விரைவில் அந்த ஆசை நிறைவேறி வாழ்நாள் முழுவதும் ஞாபகமாக இனிக்க வாழ்த்துவோம்.

