தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!

சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!

சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழை தரும் கூத்து

'இந்த கூத்து அழியாதுங்க; இதுவும், அதுவும் அப்பா தந்துட்டுப் போன உசுரு' - கூத்து கலைஞர்களின் ஆசிரியராய், கூத்தின் எல்லா பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் திறன் பெற்ற வாத்தியாராய் தஞ்சாவூர், ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் அறியப்படும் இந்த 60 வயது முத்துகிருஷ்ணன்...

'இது' என தன் நெஞ்சம் தொட்டு குறிப்பிட்டது தன் உயிரை; 'அது' என 'சலங்கை'யை கைகாட்டி குறிப்பிட்டது தன் அடையாள மான 'இரணியன் வதம்' எனும் கூத்து கலையை; வைகாசி, சுக்லபட்ச சதுர்த்தி - சுவாதி நட்சத்திர 'நரசிம்மர் ஜெயந்தி' தோறும் மேடை காணும் இக்கூத்தின் வயது 375!

எதனால் அழியாது இந்த கூத்து?

அசுர அரசனான இரணியன், பகவான் நாராயணன் மேல தன் மகன் பிரகலாதன் வைச்ச பக்தியால நரசிம்ம அவதாரத்திற்கு இரை ஆகுற அதே கதைதான்! என்ன... எங்க மக்களுக்கு இது பொழுதுபோக்கு மட்டுமில்ல; தீரா துயரத்துக்கான அருமருந்து!

இதுக்கான சாட்சிகள்ல ஒருத்தர் தான் நில அளவையரா இருந்து ஓய்வுபெற்ற ராஜேந்திரன்; தன் அம்மாவோட நேர்த்திக் கடனுக் காக அவர் இந்த கூத்துல வேஷம் கட்டி 30 ஆண்டுகள் ஆயிருச்சு; இன்னைக்கும் அவர்தான் சுக்கிராச்சாரியார்!

நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு அறிமுகமானதாக கூறப்படும் இந்த 'இரணிய வதம்' கூத்து, விவசாயிகள் நிறைந்த இக் கிராமத்தில் ஆறு தலை முறைக்கும் மேலாய் அரங்கேறு கிறது. 'இக்கூத்தாடினால் மழை பொழியும்' என்பது மக்களின் நம்பிக்கை. சிறு துாறலேனும் தந்து மக்களின் நம்பிக்கையை இதுவரை காப்பாற்றி வருகிறது மேகம்!

உடைத்தோம் உயர்ந்தோம்

இந்த கூத்துல என்ன விசேஷம்னா, இதுல வர்ற இரணியன் - லீலாவதி, பிரகலாதன் பாத்திரங்கள்ல ஒரேநேரத்துல ரெண்டுபேர் நடிப்பாங்க. எங்க கூத்து பாடல்களோட தாளம் வேகமா இருக்கும்ங்கிறதால கலைஞர்கள் வேகமா ஆடணும். மூணு நாள் ராத்திரின்னு மொத்தம் 24 மணி நேரம் நடக்கிற கூத்து; ஒருத்தரால இது சாத்தியப்படாது இல்லையா... அதான், ஒரு பாத்திரத்துக்கு ரெண்டு பேர்!

இந்த சுவாரஸ்யத்துக்கு 'சுகர்' சேர்க்குற மாதிரி ஒரு சம்பவம் சொல்லட்டுமா; அது 1988ன்னு ஞாபகம். திருவண்ணாமலை, செய்யாறு பக்கத்துல 'புரிசை'ங்கிற கிராமம்; இந்த 24 மணி நேர கூத்தை 60 நிமிஷத்துல முடிக்கணும்னு எங்களுக்கு சவால்; சந்தோஷமா மேடை ஏறிட்டோம்; ஆனா, எல்லார் மனசுலேயும் பதற்றம்!

'எப்படியாவது சாதிச்சிடணும்'னு ஒரு வெறியில அன்னைக்கு எங்க இரணிய மகாராஜாக்கள் ஆடின ஆட்டம் இருக்கே... ஆறு மர பெஞ்சு காலி; ஆனா, எல்லாருக்கும் ஆயுசுக்கும் குறையாத மன திருப்தி; காரணம்... அன்னைக்கு அடிச்சு பெய்ஞ்ச மழை.

மறுபடியும் சொல்றேன்... இந்த பூமியில மண்ணும் மழையும் இருக்குற வரைக்கும் எங்க கூத்து அழியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us