PUBLISHED ON : செப் 13, 2026

என் நினைவெல்லாம் போராட்டம்
பொது சொத்தை ஆக்கிரமிக்க துடிப்பவர்களுக்கும், மக்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 78 வயது சங்கரலிங்கம். 'போராட்டமே வாழ்க்கை' என இன்றும் வாழும் இந்த 'சமூக போராளி'யின் ஞாபகங்களில்...
போராளியான நாள்
என் 21 வயசுல கிராம அதிகாரியா எனக்கு அரசுப்பணி கிடைச்சது; 26 வயசுல பணி நீக்கம்; காரணம்... துணை ஆட்சியர் கூட களஆய்வுக்கு போயிருந்தப்போ, அவர் கால்ல செந்தட்டி இலை ஏற்படுத்தின அரிப்புக்கு மத்தவங்க மாதிரி நான் உதவலையாம்; 'பணம் கையாடல்'னு 'பொய் புகார்'ல என்னை சிக்க வைச்சு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க!
என் அப்பாவோட வற்புறுத்தல் காரணமா, துணை ஆட்சியரை அவர் வீட்டுல சந்திச்சு மன்னிப்பு கேட்டேன். ஆனா அவர், 'என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு'ன்னார். 'உங்க அதிகார திமிருக்கு அடிபணியுற ஆள் நான் கிடையாது'ன்னு சத்தம் போட்டுட்டு வந்துட்டேன்!
நீதிமன்றத்துல தீர்ப்பு எனக்கு சாதகமா வந்தது; மறுபடியும் எனக்கு பணி வழங்கச் சொல்லி உத்தரவு வந்தும், அரசு கண்டுக்கலை. இந்த சம்பவம் தான் நான் சமூக போராளியா மாற ஒரே காரணம்!
வேலை பறிபோனபின் பந்தல் அமைக்கும் தொழிலில் ஈடுபட்ட சங்கரலிங்கத்திற்கு, மனைவி, இரு மகன்கள் மற்றும் மகளுடன் நிம்மதியான ஒரு வாழ்க்கை அமைந்தது எனினும், மக்களின் பிரச்னைகளுக்காக நடைபயணம் செல்வது, உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட 'சமூக நலன்' சார்ந்த போராட்டங்களில் ஈடுபடத் துவங்கினார்.
இரக்கமற்ற இரவு
'கோவில்பட்டி மெயின் பஜாரில் நீரோடையை ஆக்கிரமிச்சு கடைகள் கட்டியிருக்காங்க'ன்னு, 2009ல் நீதிமன்றத்துல வழக்கு போட்டேன். அப்போ ஒருநாள், கார்ல வந்த நாலு பேர் என் கண்ணை கட்டி கடத்திட்டாங்க!
'குவாரிக்குள்ளே வைச்சு கொல்லப் போறாங்களோ... நம்ம உடம்பு கூட யாருக்கும் கிடைக்காம போயிடுமோ'ன்னு நடுங்கிட்டேன். தென்னந் தோப்புக்கு நடுவுல இருந்த வீட்டுல என்னை அடைச்சு வைச்சிருந்தாங்க. ராத்திரி நேரம் அவங்க போதையில இருந்தப்போ தப்பிச்சேன்.
அன்னைக்கு அந்த 24 மணி நேரமும் உசுரை கையில புடிச்சுக் கிட்டு இருந்தேன்; 'என்னை காப்பாத்துப்பா'ன்னு முருகனை வேண்டிக்கிட்டே இருந்தேன்; ஆனாலும், ஒரு வினாடி கூட 'இதுக்குமேல இம்மாதிரியான விஷயங்கள்ல நாம தலையிடக் கூடாது'ன்னு எனக்கு தோணவே இல்லை!
தாசில்தார் வழங்கிய முறையற்ற சான்றிதழ்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது, கிடப்பில் கிடந்த 'சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம்' முடிவுற காரணமானது...
அரசு குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் தடையற்ற தண்ணீர் விநியோகத்திற்கு தண்ணீர் தொட்டி நிறுவியது உள்ளிட்ட இவரது போராட்ட அனுபவங்களை நினைவுகளாக கேட்டறிந்தபின் அவரிடம் நாம் கேட்ட கேள்வி...
இத்தனை போராட்டங்களில் உங்களுக்கு விரக்தி தந்தது...
நல்லவர்களின் மவுனம்.
