
'பெருமாளின் 10 அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே மிகவும் அழகானது' என்பது திருமழிசை ஆழ்வார் வாக்கு!
திண்டுக்கல், தாடிக் கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில், பகவான் நரசிம்மரை போர்க்கோலத்திலும், சம்ஹார கோலத்திலும் எதிரெதிர் துாண்களில் செதுக்கி இருக்கின்றனர் விஜயநகரத்து சிற்பிகள்! கோவில் பட்டரான ராமமூர்த்தி, நரசிம்மரின் இந்த போர்க்கோலத்தை இப்படி சிலாகிக்கிறார்...
'துாணிலும் இருப்பேன் என்று வெளிவந்த நரசிம்மர், ஹிரண்ய வதத்திற்கு முன் அவனை எப்படி பதற வைத்திருப்பார்' எனும் சிற்பியின் கற்பனை இது! இடது கால் உடல் எடை தாங்க, வலது குதிகால் சற்றே உயர்த்தி, மார்பு விரித்து, நரசிம்மர் கை ஓங்க... அவர் பிடியில் சிக்கிய ஹிரண்யனின் முகம் முழுக்க பெரும் அச்சம்!
'இதோ... நரசிம்மரின் வலது மார்பில், தேவியின் அம்சமான முக்கோண வடிவ ஸ்ரீவத்சம் மச்சம்; 'தாய் இருக்கும் இடத்தில் தண்டனைகளுக்கு இடமில்லை' என்பதால், இது வெறும் பயமுறுத்தும் போர்க்கோலம் மட்டுமே; வதம் செய்யும் சம்ஹார கோலத்தில் இந்த மச்சத்தை நீங்கள் காண முடியாது' என ஆழமான அர்த்தம் சொல்லி முடித்தார் பட்டர்.
கைகள் உயர்த்தி ஆக்ரோஷித்து நிற்கும் நரசிம்மரையும், செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கும் ஹிரண்யனையும் உற்றுப் பார்த்தால்... 'தான்' என்ற அகந்தை ஹிரண்யனிடம் துளியும் இல்லை; 'நான்' என்றபடி உயர்ந்து நிற்கிறார் பகவான் நரசிம்மர்.
'அகந்தை துறப்பதே பக்தி' என்று அறிவூட்டுகிறது சிற்பம்; பூஜிக்கப்பட வேண்டியவர் சிற்பி.

