PUBLISHED ON : மார் 15, 2026

'செப்பு திருமேனி' போன்ற இக்கருங்கற்சிலை வீரனின் கம்பீர அழகை, ஆத்மநாத சுவாமி சன்னதி அருகில் கண்டு ரசிக்கலாம். புதுக் கோட்டை, அறந்தாங்கி - மீமிசல் சாலையில் உள்ள ஆவுடையார் கோவிலில் உள்ளது கலை பேசும் இச்சிலை.
இத்தலம், மாணிக்கவாசகர் தொடர்புடைய 'நரியை பரியாக்கிய சிவலீலை' அரங்கேறிய பெருமை கொண்டது! 'ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக' எனும் ஒப்பந்த ஓலை எழுதியபின்பே, பிற திருப்பணிகளை சிற்பிகள் துவக்குவதான வரலாற்றுப் பெருமையும் இக்கோவிலுக்கு உண்டு.
தொங்கு மீசையை இடது கை விரல்கள் முறுக்க, உறையிலிருந்து விடுவித்த குறுவாளை வலதுகரம் பற்றியிருக்க, குறுவாளின் நுனி வலது முழங்காலில் படும்படி கல்லில் ஒரு கம்பீரம். வீரனின் வலது குதிகால் உயர்ந்திருக்க, விரல்கள்பூமியில் தரும் அழுத்தத்தை கணுக்கால் புடைப்பின் வழியே சொல்லி இருப்பது சிற்பியின் சிறப்பு.
உள்ளங்கால் வளைவு, முழங்கால் எலும்பு, விரல்கள், நகங்கள், குண்டலங்கள், காற்சிலம்புகள் அத்தனையும் துல்லியமாய் கல்லில் தெரியும் வண்ணம் கவின்மிகு வேலைப்பாடு. கூரிய குறுவாளின் முனையும், தோளில் ஏந்தியிருக்கும் கொம்பு வாத்தியக் கருவியின் கைப்பிடியும் தனித்து தெரியும்படி, 'இது மரமா, இரும்பா' என தொட்டுப் பார்க்கத் துாண்டும் வகையில் செதுக்கி இருப்பது சிற்பியின் சாகசம்!
'போற்றுதலுக்குரிய 63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் யாகத்திற்கு, புலையன் புலைத்தியர் வேடத்தில் சென்ற அம்மையப்பரே இந்த வீரன்' என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் மணிகண்டன்.

