PUBLISHED ON : ஜூலை 05, 2026

வேலுார் கோட்டையினுள் 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஜுவரஹேஸ்வரர் எனும்
ஜலகண்டேஸ்வரர் கோவில்; இதில், 'இது சிற்ப கலைக்கூடமா' என ஆச்சரியம் கொள்ள
வைக்கும் மண்டபம்; அதன் ஒரு துாணில், காண்போரை தன் அழகால் மயக்கும்
வேட்டுவச்சி!
தன் பாதத்தில் தைத்த முள் எடுக்கிறாள்; எப்படி பாருங்கள்... வளைத்து துாக்கிய வலது காலை இடக்கை விரல்கள் தாங்கி நிற்க, தள்ளாடாது ஒரு காலில் நிற்க வேண்டும்; இதற்காக தன் இடப்புறம் அவள் ஊன்றி இருக்கும் வில், அவளோடு உரசி நின்று உதவி செய்யும் மோகம் பாருங்கள்!
அழகே வடிவானவளின் கால்களது வாழைத்தண்டு வழுவழுப்பை கல்லில் இழைத்திருக்கும் சிற்பி, உடுக்கை பெருமூச்சிடும் வகையில் அவளது இடை வடித்திருக்கிறார்! அழகியின் வலக்கை விரல்களுக்குள் இதமாய் சிறைபட்டிருக்கும் அம்பானது, தன் கூரிய முனையால் பஞ்சு பாதத்தில் பதிந்திருக்கும் முள்ளை அவள் சொல்படி நெம்பி எடுக்கிறது!
'அப்பாதத்தின் மெல்லிய ரேகைகளை நம் பார்வைக்கு தந்திருக்கும் சிற்பி, அவளை இப்படி ரசித்து செதுக்கிய தருணத்தில் எவ்வித மன நிலையில் இருந்திருப்பார்' என்ற நினைப்பே உள்ளூர தேன் பாய்ச்சுகிறது!
பளிங்கு முதுகோடு முகம் சாய்த்து கிடக்கும் அம்பறாத்துாணியும், அதில் சுகமாய் துயிலும் அம்புகளின் பின்பகுதியும், காலடியில் நின்றபடி அவள் வலியை தன் வலியாய் உணரும் வேட்டை நாயின் துயரும், எதற்காகவும் கவனம் சிதறாத மற்றொரு நாயின் காவல் திறனும்... விஜயநகரப் பேரரசு சிற்பிகளின் நுண்ணிய திறனுக்கான மணிமகுடங்கள்.
