
'உங்களின் வாழ்க்கை மீது தாக்கம் செலுத்துவது யார்... எது?' என்ற கேள்விக்கு, சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சொன்னவை இவை!
'இவர்கள் தேசத்தின் தேவைகள்' என்பதை உணர்த்துகின்றன இப்பதில்கள்...
* 'என்னை வழிநடத்தும் சக்தி கவிதைகளுக்கு உண்டு; 'இதுவரை மலர்ந்து இருந்ததற்கான எந்த தற்பெருமையும் உதிர்ந்த பூவிடம் இல்லை; அது அப்படியே இருந்தது, ஒரு விடையை சரியாக எழுதிவிட்டது போல!' - கடமை செய்ததற்கு பாராட்டு எதிர்பார்க்கக் கூடாதென எனக்கு உணர்த்தியது கல்யாண்ஜியின் இக்கவிதை!'
- இ.இசக்கியம்மாள்.
*'படித்தது கட்டடக்கலை என்றாலும், நுாறாண்டுகளாக வழக்கத்தில் இல்லாத யாழ், குடமுழா இசைக்கருவிகள் பற்றி ஆராய்ந்து அதை மீண்டும் உருவாக்கி, இதற்காக 'உரு' எனும் நிறுவனத்தை துவக்கிய தருண் சேகர் என் குரு; 'விருப்பமுள்ளதை தேடினால் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்' என்பதை எனக்கு உணர்த்தியவர்!'
- வே.ஐஸ்வர்யா.
* 'பெற்றோர் பிரிவால் விடுதியில் தங்கி பள்ளிக்கல்வி முடித்தவர் என் பேராசிரியர் குறளரசன்; உதவித்தொகையில் உயர்கல்வி, குற்றவியல் துறையில் முனைவர் பட்டம்; இன்று, உலகப் புகழ்பெற்ற பெல்ஜியம் கென்ட் பல்கலையில் அவர் பேராசிரியர்; தன் துயரங்களை நினைத்தே காலம் கடத்த வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்து சாதித்த உண்மையான பலசாலி!'
- ரா.நந்தகுமார்.

