
'சொன்னதை எல்லாம் நம்புவதற்கு நாங்கள் தொண்டர்களும் அல்ல; ஒப்பனையில்
மயங்கி பின்செல்வதற்கு நாங்கள் ரசிகர்களும் அல்ல' என்று கம்பீரம் காட்டும்
இவர்கள், சென்னை லயோலா கல்லுாரியின் தமிழ்த்துறை மாணவர்கள்; இவர்களது
வழிகாட்டிகள் யார்?
'ஹிட்லர் நிகழ்த்திய 'ஹோலோகாஸ்ட்' இனப்படுகொலை தருணத்தில், யூத அகதிகளின் உயிர் காத்த ஜெர்மனி தொழிலதிபர் ஆஸ்கர் ஷிண்ட்லர்; தாமஸ் கெனலி எழுதி வெளியான 'ஷிண்ட்லர்ஸ் ஆர்க்' நாவலும், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படமும் இவரை என் வழிகாட்டி ஆக்கி விட்டன!'
நி.சல்மான்
'ஈரோடு, சத்தியமங்கலம், கடம்பூர் மலைக்கிராமத்தில் குழந்தை திருமணம், பெண் பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வுக்காக தீவிரமாக களப்பணியாற்றிய கோகுல கண்ணன்; இந்த சமூக ஆர்வலரது முயற்சியால் எங்கள் கிராமத்தில் பெரும் மாற்றம். 'சமூக வளர்ச்சியில் உன் பங்கு என்ன' எனும் கேள்வியை எனக்குள் விதைத்த இவர் என் குரு!'
பா.சிரஞ்சீவி
'நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க அவற்றை பலருக்கு கற்பிக்கும் கிராமிய கலைஞர்; கிராமிய கலைஞர்களது குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் சிறந்த பேராசிரியர்; இந்த காளீஸ்வரன் அய்யாவின் விரல் பற்றியதால் ஒயில், கரகம், சாட்டைக் குச்சி கலைகள் என் வசம். அய்யா... உங்கள் வழியில் நான்!'
ர.முருகன்

