PUBLISHED ON : ஜூன் 28, 2026

உயிரில் உறைந்த வெப்பம்
ஒருவரை முன்மாதிரியாக கருதுவதற்கும், துதி பாடுவதற்கும் உள்ள வேறுபாடு
அறிந்த வேலுார், ஆக்சிலியம் மகளிர் கல்லுாரி இளங்கலை மாணவியரான இவர்களிடம்,
'உங்களின் ஆதர்சம் யார்' என்று கேட்டதும் கிடைத்த பதில்கள் இவை...
'கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்தியர்களின் போராட்டங்களில், வ.உ.சி.,யின் 'சுதேசி நாவாய் கழகம்' கப்பல் நிறுவனம் நமக்கான வர்த்தக சுதந்திரத்தை வலியுறுத்தி, 'துாத்துக்குடி - கொழும்பு' இடையே கப்பல் இயக்கியதையும், அப்போராட்ட சிந்தனையின் பெரும் வெப்பத்தையும் எனக்குள் ஏந்தியிருக்கிறேன்!'
வ.காமாட்சி கன்னிகை, வரலாறு
'கணிதவியலாளரான சகுந்தலா தேவியை ஆதர்சமாக கொண்ட நானும் என் தோழி எப்சிபாவும், 'பிபோனாசி' எண்களில் ஆய்வுகள் செய்து 'பிதாகரஸ் தேற்றம்' போல் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் புதுமை புகுத்த வாய்ப்புள்ள எங்கள் கண்டுபிடிப்புக்காக சகுந்தலா தேவியாய் உழைக்கிறோம்!'
ச.ருச்சிதா, கணிதவியல்
'ஒரு பயிலரங்கில் தென்காசி, டி.ஏ.எப்., ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர் ஆகாச மூர்த்தியை சந்தித்தேன். 'உங்களை இயக்கும் சக்தி எது' என்ற என் கேள்விக்கு, 'கற்றலை நிறுத்தாத மாணவர்களே என்னை புதிதாக கற்க வைக்கின்றனர்; அவர்களே என்னை இயக்கும் சக்தி' என்றார். தீராத அறிவுப்பசியை எனக்குள் துாண்டிவிட்ட அவரே என் வழிகாட்டி!'
பா.ஆர்த்தி, வணிகவியல்
