PUBLISHED ON : ஜூலை 26, 2026

பொன்னாய் மின்னும் பெண்மீன்கள்
பொய் பேசாத அரசியல்வாதிகளைத் தேடியும், தன் வளர்ச்சிக்கு ரசிகர்களை
பயன்படுத்திக் கொள்ளாத வெள்ளித் திரை கலைஞர்களைத் தேடியும் களைத்து விட்ட
காரணமாக கூட இருக்கலாம்... காஞ்சிபுரம், எஸ்.சி.எஸ்.வி.எம்.வி., பல்கலையின்
இளங்கலை மாணவியரது இவ்விருப்பங்கள்...
'அன்று அரசுப்பள்ளி பிளஸ் 1 மாணவியான புதுக்கோட்டை ஜெய லட்சுமி, தனக்கு உதவ முன்வந்த தொண்டு நிறுவனத்தை தன் ஆதனக்கோட்டை கிராமத்திற்கு 126 கழிப்பறைகள் கட்டித்தருமாறு கேட்டு கிராமத்து தேவதை ஆனார். மஹாராஷ்டிர அரசின் 7ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பிடித்த அவரது 'நாசா' கனவு எனக்கான விளக்கு!'
ரா.கனிமொழி, பி.காம்.,
'மழலை பருவத்தில் பேசும், கேட்கும், பார்க்கும் திறன் இழந்தாலும், 10 வயதிற்குள் 'பிரெய்லி' முறையில் உலக மொழிகள் கற்று, 21 வயதில் 'சுயசரிதை' எழுதி, 'இளங்கலை பட்டம் பெற்ற உலகின் பார்வை அற்ற, காது கேளா முதல் பெண் மணி' அந்தஸ்தை 24 வயதில் பெற்று, 'சமூகப்போராளி'யாக வாழ்ந்த அமெரிக்காவின் ஹெலன் கெல்லர் என் குரு!'
க.ரேஷ்மா, பி.எஸ்சி.,
'ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு 1977ல் வருகிறது; ஆனால், தான் நிறுவிய
'கலாஷேத்ரா' நடனப்பள்ளியில் இருந்தும், பரதக்கலையில் இருந்தும் அப்பதவி
தன்னை பிரித்து விடுமோ' எனும் அச்சத்தில் அதை தவிர்த்த ருக்மிணிதேவி
அருண்டேல் எனும் மகாகலைஞரை மனதில் பூஜிக்கிறேன். நம்மில் பலருக்கு பரதம்
இன்று சுவாசமாக இருக்க அவரே காரணம்!'
ச.பா.அமிர்தவர்ஷினி, பி.எஸ்சி.,
