PUBLISHED ON : நவ 30, 2025

இப்போற்றுதலுக்கு சாட்சியாய்... துாத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் கைலாச நாதர் கோவில் தேர் சிற்பம். அகண்ட வீதியின் முச்சந்தியில் சிதைந்து போய் நிற்கும் தேரில் இன்னும் உயிர்ப்புடன் சில மரச்சிற்பங்கள். அதிலொன்று... யானையின் கதவு தகர்க்கும் கோலம்!
தேரின் வலப்புற அடிப்பாகத்தில் கீழிருந்து இரண்டாவது வரிசையில், ஆறு முதல் எட்டு அங்குல உயரத்தில், கோட்டை கதவுகளை பெருந்தடி கொண்டு தகர்க்க முனையும் களிறுகள்; அவற்றின் கால்களில் கவசங்கள், கழுத்தில் பட்டைகள், முதுகில் பட்டுத்துணி; ஆக்ரோஷத்துடன் அவை முன்னேறுவதை ரசித்து செதுக்கியிருக்கிறார் சிற்பி!
யானைகளை உக்கிரமாக்க தடியின் முன்னமர்ந்து வீரனொருவன் முரசறைய, பின்னால் வாள் மற்றும் கேடயத்துடன் இன்னொருவன்! முரசு கொட்டுபவனை சுமப்பதால் முன்நிற்கும் யானைக்கு மட்டும் சற்று கூடுதல் பாரம். இதனை, சற்றே நிமிர்ந்திருக்கும் அதன் தலை நமக்கு உணர்த்தும்படி செதுக்கப்பட்டிருக்கும் விதம் ஆஹா... அற்புதம்.

