
'பூ பூக்கும் போதான செடியின் உணர்வை, பூமிக்கும் மழைக்கும் இடையிலான பேரன்பை, இந்த இசைக்கருவிகளை இசைக்கையில் உணர்கிறேன்' என்கிறார் மாணவி; புன்னகை பரிசளிக்கிறார் இச்சிலிர்ப்புக்கு காரணமான ஆசிரியர்.
இந்த வார...
சிலை: வர்ஷிகா துளசிராம், பிளஸ் 1 வணிகவியல்
சிற்பி: சி.வாசுதேவன், கலை ஆசிரியர்
பள்ளி: விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜ், பெரம்பூர், சென்னை.
சிலையின் மொழி
நான் மூன்றாம் வகுப்பு மாணவியா இருந்தப்போதான் சார் எனக்கு அறிமுகம். ஓவிய ஆசிரியரா எனக்கு பரிச்சயமானவர், நான் எட்டாம் வகுப்பு படிக்கிறப்போ இசை ஆசிரியரா வந்தார். அப்போ, நான் வகுப்பு தலைவி!
ஒருநாள் என் வகுப்புல சத்தம் அதிகமா எழும்ப, நேர்ல வந்த தலைமை ஆசிரியை வாசுதேவன் சாரை கண்டிச்சார். 'நிகழ்ந்த தவறுக்கு நான் பொறுப்பு; இனி, இப்படி நடக்காது'ன்னு தலைமை ஆசிரியைகிட்டே உறுதியா சொன்னவர், அவர் போனதும் வகுப்பு தலைவியான என்னை கூப்பிட்டார்!
அவர் பேச ஆரம்பிக்கிறதுக்குள்ளே, 'வகுப்பு தலைவிங்கிற முறையில இது என் பொறுப்பும் கூட; இனி இப்படி நடக்காது சார்'னு நான் முந்திக்கிட்டேன். தவறை ஒத்துக்கிற தைரியமும், திருத்திக்கிற பலமும் அப்போ இருந்துதான் எனக்கு கிடைச்சது!
பள்ளிகளுக்கு இடையிலான இசைப்போட்டியில எனக்கு மூணாவது பரிசு. வாசுதேவன் சாரை அழைச்சு நடுவர்கள் பாராட்டினாங்க. 'இதுல என் பங்கு வெறும் 10 சதவீதம்தான்'னு சொன்னார். 'தலைமை பண்புன்னா என்ன'ன்னு அன்னைக்கு எனக்குப் புரிஞ்சது!
தபேலாவோடு தோலக், தோல்கி, கோல் இசைக்கருவிகளையும் இசைக்க வர்ஷிகாவுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார் வாசுதேவன்.
*இந்த குருவின் தனித்தன்மை என்ன வர்ஷிகா?
'ஐ.எப்.எஸ்., அதிகாரி ஆகணும்னு கனவு இருக்குறதா அடிக்கடி சொல்ற நீ, அந்த கனவை நிஜமாக்குறதுக்கு உன்னை அதிகமா வருத்திக்கணும். ஒழுக்கமா வாழ நினைக்கிற மனுஷனுக்குதான் நிறைய சிரமங்கள் வரும். அந்த சிரமங்களுக்கு பழக்கப்பட்டுட்டா எந்த உயரத்தையும் சுலபமா தொட்டுடலாம். மறந்துடாதே... அறிவு, சாமர்த்தியம், பேச்சுத்திறன் எல்லாத்துக்கும் மகுடம் சூட்டுறது ஒழுக்கம்தான்'னு என்னை வழிநடத்துறார்!
கலை ஆசிரியராக வாசுதேவனுக்கு இது 28வது ஆண்டு.
*உளியின் மொழி
'மதிப்பெண் குறையுறதுக்கு கூடுதல் திறன் வகுப்புகளோ, விளையாட்டு பயிற்சிகளோ காரணம் இல்லைங்கிறதை பெற்றோர்கள் புரிஞ்சுக்கணும். பாடம், தேர்வுன்னு பரபரன்னு இருக்குற மூளைக்கு கிடைக்கிற ஓய்வுதான் இந்த கூடுதல்திறன் பயிற்சி. சிறந்த மாணவர்களை இந்த பயிற்சி இன்னும் செதுக்கும்!'
- ஆசிரியர் சி.வாசுதேவன்.