
'எங்களோட அன்புதான் எங்க தமிழம்மாவுக்கான விருதுகள்' - கதிரவா இப்படிச்
சொன்னதும், 34 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்கும் தமிழாசிரியை சாந்தாவின்
முகத்தில் பெருமிதம்!
இந்த வார...
சிலை: ஆ.கதிரவா, பிளஸ் 2
சிற்பி: கே.சாந்தா, தமிழாசிரியை
கருவறை: குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம், செங்கல்பட்டு.
தமிழ் தவிர்த்து சாந்தா அம்மா...
நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும்போது நிகழ்ந்த அந்த பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புதான் சாந்தா அம்மா மேல எனக்கு அதீத மதிப்பு வரக்காரணம். மாணவர்களோட குறைகளை பெற்றோர்கிட்டே அவங்க மென்மையா சொன்னவிதம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது!
தேர்வறை கண்காணிப்பாளரா அவங்க வர்றப்போ எல்லாம், 'என்னை ஏமாத்துறதா நினைச்சு உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க'ன்னு மட்டும்தான் சொல்வாங்க; அந்த தேர்வறையில எந்த தப்பும் நடக்காது! 'எதையும் மேலோட்டமா அணுகாம ஆணிவேர் வரை தெரிஞ்சுக்கணும்; அதுதான் அறிவு'ன்னு சொல்ற அவங்க அறிவுரைதான் எனக்கான வழிகாட்டி!
அந்த ஒரு வார்த்தை
'மாதிரி வினாத்தாள்' அடிப்படையில மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுறதை எங்க தமிழம்மா எப்பவும் ஊக்குவிக்கிறதே இல்லை! 'பணம் கொடுத்துதானே தமிழ் பாட புத்தகம் வாங்குறீங்க; அப்போ, கொடுத்த காசுக்கு புத்தகத்தை முழுசா படிச்சாத்தானே அறிவு விருத்தியாகும்'னு கேட்பாங்க!
'புத்தகத்தோட கடைசி பக்கம் வரைக்கும் முழுசா படிக்கிறதுதான் பெத்தவங்களோட உழைப்புக்கும் செலவுக்கும் நாம கொடுக்குற மரியாதை'ன்னு அவங்க சொல்றப்போ, என் அம்மா - அப்பா முகம் என் ஞாபகத்துக்கு வரும். வகுப்புல இருக்குற அத்தனைபேருமே என் உணர்வுலதான் இருப்பாங்க. தமிழம் மாவோட இந்த வழிகாட்டுதல் அவங்க எங்க பாதைக்கு தர்ற விளக்கு!
சில தனித்துவ குணங்களோடு ஜொலிக்கும் கதிரவாவுக்கு பிளஸ் 1 வகுப்பில் இருந்து தமிழ் பாடம் போதித்து வருகிறார் ஆசிரியை சாந்தா. தன் தனித்துவங்கள் பற்றி இச்சிலை மனம் திறந்தபோது...
'நான்தான்ங்கிற எண்ணம் எனக்கு கிடையாது; யாரையும் நான் உருவகேலி பண்றதில்லை; எல்லா மத நுால்களையும் வாசிக்கணும்ங்கிற பேரார்வத்தோட வாழ்றேன்!'
இதற்கும் காரணமும்... சாந்தா அம்மா தானா?
சந்தேகமே வேண்டாம்; அவர்தான்... அவர் மட்டும்தான்.
* உளியின் மொழி
'வெற்றியை அமைதியாக கடப்பது சிறந்த மனவளத்தின் அடையாளம்; இப்பக்குவம் கொண்ட மாணவர் சமூகம் வாழ்க்கையின் பெரிய உயரங்களை நிச்சயம் தொடும். தோல்விகளை சுலபமாகத் தாங்கும். என் மாணவர்களுக்கு இந்த மனவளம் தருவது என் கடமை!'
- கே.சாந்தா, தமிழாசிரியை.

