தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/உன்மாதம் (மலையாளம்)

உன்மாதம் (மலையாளம்)

உன்மாதம் (மலையாளம்)


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'என்னை தொட்டே... நீ கெட்டே!' - இப்படிக்கு ஒரு வழக்கு



'அந்த கோப்பு மீது கை வைத்தாலே ஆபத்து' என்று ஒரு வழக்கின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் காவல் நிலையத்திற்கு, பணியிட மாறுதலால் வரும் ஷெல்லி, தன் திரைப்பட கதாசிரியர் கனவை நனவாக்க அக்கோப்பு கயிற்றை அவிழ்க்கிறார். மழை வெளுக்க, மின்வெட்டில் இருள் சூழ, மெழுகுவர்த்தி ஒளியில் வெண்புகை உருவம் தெரிய... கிளம்பிடுச்சுய்யா... கிளம்பிடுச்சுய்யா!

காவலராக இருந்து திரைப்பட கதாசிரியராகி, காவல் துறை சார்ந்த பரபரப்பு கதைகளை தன் அனுபவத்தால் திறம்பட வழங்கும் ஷாகி கபீரின் எழுத்தில் மற்றுமொரு படைப்பு. 'அவரைப் போலவே திரைப்பட கனவுள்ள ஒரு நாயகன்' எனும் கதைக்கரு, நம் ஆர்வத்தை துாண்டுவது என்னவோ உண்மைதான்!

ஆனால், ஷெல்லியின் திறமை, மற்ற பாத்திரங்களின் குணங்கள் எதுவும் திரையில் வெளிப்படவில்லை. திரைக்கதையின் அசல் தன்மையை அமானுஷ்ய மேல்பூச்சால் மறைத்து சொதப்பி இருக்கிறார் ஷாகி கபீர்.

'படத்தொகுப்பாளர் இயக்குனராகும் போது கதைசொல்லல் கூர்மைப்படும்' என்கிற கருத்தை தன் இயக்கத்தால் தகர்த்திருக்கிறார் கிரண் தாஸ். சுயநலத்திற்காக அவ்வழக்கை பயன்படுத்தும் ஷெல்லி, ஓர் ஆன்மாவுக்கு நீதி பெற்று தருபவராக மாறுவதற்கு, முக்கால்வாசி திரைக்கதை எரி பொருளாகி இருக்கிறது.

'ஏன், எதற்கு, எப்படி, எங்கே, எப்போது' உள்ளிட்ட வழக்கு குறித்த கேள்விகளுக்கு, ஷெல்லி பதில் சொல்லாது ஆன்மாவே பதில் தருவது வினாத்தாள் மோசடிகளை எல்லாம் விஞ்சி நிற்கிறது!

வேரின் பிரச்னை கிளைகளை எட்ட சிறிது காலம் எடுத்துக் கொள்வதைப் போல, மேற்கூறிய குறைகள் நம் ரசனையில் தாக்கம் செலுத்தும் வரை குஞ்சாக்கோ போபன் - லிஜோமோல் ஜோஸ், தங்களது இல்லற வாழ்வின் வழி விருந்து வைக்கின்றனர். 'வழக்கின் மர்மத்தை குஞ்சாக்கோ எப்படி அறியப் போகிறார்' என்கிற எதிர்பார்ப்பை பெரிதாய் கிளப்புகிறது இடைவேளை.

இப்படி, சில சுவாரஸ்ய துாறல்கள் இறுதிவரை இருப்பதால், 'இது கற்பனை வறட்சியுள்ள படைப்பு' எனும் உணர்வு எழவில்லை. எனினும், 'மலையாள திரை ரசிகனின் யானைப் பசிக்கு இது சோளப்பொறிதான்' என்பது சற்று கசப்பான உண்மை.

'ரெயின் கோட்' எடுத்துச் சென்ற நாளில் கொளுத்தும் வெயிலில் குளிப்பது போன்ற அனுபவம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us