நாங்க என்ன சொல்றோம்னா...: ஜப் குலி கிதாப் (ஹிந்தி)
நாங்க என்ன சொல்றோம்னா...: ஜப் குலி கிதாப் (ஹிந்தி)
PUBLISHED ON : மார் 15, 2026

தங்களது முதிர் காதலை பரிசோதனைக்கு உட்படுத்தும் தம்பதி
இரண்டாண்டு கால கோமாவில் இருந்து மீள்கிறார் 70 வயது அனுசுயா. திருமணமான நான்கு மாதத்தில் தனக்கு உருவான இன்னொரு காதல் உறவைப் பற்றி 74 வயது கணவர் கோபாலிடம் அனுசுயா பகிரும்போது, கோபாலின் மனம் துரோகத்தை உணர்கிறது. அவர் விவாகரத்து கோருகிறார்... மனைவி மறுக்கிறார்; இந்த வயதில் காதல் என்னவெல்லாம் செய்யும்?
இப்படியான கதாபாத்திரங்களை உலவவிட்டு காட்சிகளை உருவாக்குவதில் மலையாள திரைப்பட கதாசிரியர்களுக்கு சவால் விட்டிருக்கிறார் 63 வயது இயக்குனர் சவுரப் சுக்லா.
உத்தரகண்டின் ராணிகேத் மலைப் பிரதேசம் தான் கதைக்களம். குளிர் காலத்தின் அதிகாலை வேளையில் திரையில் விரியும் முதல் காட்சிக்கும், க்ளைமாக்ஸில் வரும் தம்பதியின் நடைபயிற்சி காட்சிக்கும் அழகிய தொடர்பை ஏற்படுத்தி, இறுதி காட்சியை இயக்குனர் நிறைவு செய்கையில் நம் மனதில் அப்படியொரு திருப்தி!
'கணவனின் அன்பு கிடைக்காத நீதிபதி பாத்திரம் அந்த கலகலப்பான ஆண் வழக்கறிஞரின் கரம் பற்றும்' என்று நினைக்க வைத்து, ஒரு வினாடி காட்சியில் நீதிபதிக்கான தீர்ப்பை மாற்றி எழுதியது 'ஹைக்கூ'வாக ஈர்க்கிறது.
'நான் காதலிச் சவன் உயிரோட இல்லைங்கிற தகவலை மனசுக்குள்ள ரசிச்சியா' என்று கேட்கிற அனு சுயாவிடம், கோபால் 'ஆம்...' சொல்லிய பிறகு அவர்கள் உறவின் விரிசல் சுருங்கிப் போகும் காட்சி; 'நீ எனக்கு பிறந்தவன் இல்லை' என்று மகனை வெறுக்கும் கோபால் அவன் நினைவுகளில் மூழ்கும் காட்சிகள் புகைப்படங்களாக பதிகின்றன!
'கணவன் ம னை வி உறவில் உண்மையைச் சொல்வது வரமா - சாபமா' என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு உணர்ச்சிகளை அலசி இருக்கின்றனர். அன்பிற்குரியவராக இருப்பதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள ரசிகர்களுக்கு உதவுவதோடு, முதிர் காதலின் தாங்குதிறன் பற்றியும் சொல்கிறது பங்கஜ் கபூர் - டிம்பிள் கபாடியா ஜோடி.
ஆக...
பாசாங்கு இல்லாத காதல் கைவரப்பெற்ற மனம் எப்படி இருக்கும்; இப்படித்தான் இருக்கும்

