PUBLISHED ON : நவ 30, 2025

காமெடிக்கு கல்லறை கட்டியிருக்கும் படம்!
படையப்பா ரஜினியின் பின்னால் கண்ணுக்கு எட்டிய துாரம் வரையில் மக்கள் நிற்பது போல், இப்படத்தில் 'காமெடி' போர்வை உடன் பல கன்றாவிகள் அணிவகுத்து நிற்கின்றன!
வில்லனின் அடியாள் 'காதலே காதலே தனிப்பெரும் துணையே...' பாடலை ரிங்டோனாக வைத்திருப்பது ஒரு காமெடியாம்; ரீட்டாவின் அம்மா முருகனிடம் வைக்கும் வேண்டுதல் எண்ணிக்கையை கிரிக்கெட் 'ஸ்கோர்' போல திரையில் காட்டுவது அடுத்தது; கெட்ட வார்த்தையின்றி ஒருவனுக்கு பேசவே வராதது இன்னொன்று; ரெடின் கிங்ஸ்லி போலவே ரெடின் கிங்ஸ்லி மிமிக்ரி செய்வது இவற்றின் உச்சம்!
எதிரிகள் கையால் சுடப்பட்டு சாக வேண்டிய புதுச்சேரி 'டான்' டிராகுலா பாண்டியன், அவனுக்கு சம்பந்தமில்லாத ரீட்டாவின் வீட்டிற்குள் போய் அவர்கள் கையால் அடிபட்டு சாகிறான். டிராகுலா பாண்டியன் உடலை வைத்து நிகழும் களேபரங்களே கதை!
விஜய் போல ஒருபக்கமாக சாய்ந்து நிற்பது, உடலை குலுக்கிவிட்டு அமர்வது என கீர்த்தி சுரேஷ் எடுத்திருக்கும் நடிப்பு ஜெராக்ஸைக் காட்டிலும் அவரது 'குதிரை வால்' கூந்தல் பார்க்கும்படி இருக்கிறது. கோலமாவு கோகிலாவின் அம்மாவை நினைவூட்டு கிறார் ராதிகா; வினாத்தாள் கசிந்தபின் நல்ல மதிப்பெண் வாங்கியது போன்ற நடிப்பு; குறிப்பாக, 'அத்தை சொல்றேன்... சுடுங்க மாப்ள' வசனத்தின் 'டைமிங்' செம!
தன் உடலை கட்டுமஸ்தாக சரித்திரத்தில் இடம்பெறச் செய்ய இம்சை அரசன் 23ம் புலி கேசி க் கு உதயமான ஓவிய சிந்தனையைப் போல, இங்கே இயக்குனர் ஜே.கே.சந்துருவுக்கு கோலமாவு கோகிலா படம் பார்க்கையில் இக்கதை தோன்றியிருக்கலாம். 'உடனே படமாக்கினால் தேறாது' என்று ஏழு ஆண்டுகள் கழித்து படமாக் கி இருக்கிறார்; பாவம்... இப்போதும்... ம்ஹும்.
ஆக...
கார்த்திகை போய் மார்கழி போய் தை பிறந்ததும் இந்த காமெடிகளுக்கு நமக்கு சிரிப்பு வரக்கூடும்!

