நாங்க என்ன சொல்றோம்னா...: சர்வம் மாயா (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: சர்வம் மாயா (மலையாளம்)
PUBLISHED ON : ஜன 04, 2026

முற்றுப்புள்ளி, கதையை அழகாக்கும் அல்லது கனம் கூட்டும்; இக்கதைக்கு...?
பூஜை புனஸ்காரங்களுக்காக பெரிதும் அறியப்படும் நம்பூதிரிகள் குடும்ப வழிவந்த பிரபெந்து, கிடார் கலைஞன்; நாத்திகன். சூழ்நிலை காரணமாக ஒரு வீட்டில் அவன் பூஜை செய்ய, ஆன்மாவாக அவ்வீட்டில் உலவிய இளம் பெண் இவனோடு வந்துவிடுகிறாள். இருவரும் சேர்ந்து அவளின் மோட்சத்திற்கான முற்றுப் புள்ளியை தீவிரமாய் தேடுகின்றனர்.
'பெண் ஆன்மா' என்றாலே அது தன்னை சீரழித்த நபர்களை மாற்று உடல் புகுந்து, தேடி பழி தீர்க்கும் என்று தான் பெரும் பாலும் கதை உருட்டுகின்றனர். இங்கே, மறந்து போன தன் நிஜப் பெயரை இந்த ஆன்மா தேடு வதாய் திரைக்கதை!
இத்தேடலின் வழியே பிரபெந்து தன் மனக் காயங்களை ஆறச் செய்வது, அவன் கண்களுக்கு மட்டும் புலப்படும் ஆன்மா தரும் சந்தோஷங் கள், அழகே வடிவான சாத்யாவுடன் பிர பெந்துவுக்கு காதல் மலரும் தருணம் உள்ளிட்ட பல விஷயங்களை சேர்த்து, நம் விழியோரம் கண்ணீர் துளியை உற்பத்தி செய்து, அடுத்தடுத்த நிகழ்வுகளில் அதனை உருண்டோட வைக்கின்றனர்!
எதையும் போகிற போக்கில் கையாளும் 'ஜென் இசட்' ஆன்மாவாக ரியா ஷிபு; இவருக்கு முந்தைய தலைமுறையின் வாழ்வியல் கொண்ட பிரபெந்துவாக நிவின் பாலி; 'ஆண் - பெண் நட்பின் ஊடலும் ரசிக்கத்தக்கதே' என்கிறது இந்த ஜோடியின் அன்பு. இவர்களது நட்பை வேறொரு தளத்திற்கு நகர்த் திய விதத்தில் இயக்குனர் அகில் சத்யனின் சாமர்த்தியம் மிளிர்கிறது.
ஒரு கிளை நதி, தான் பிரிந்த நதியிலேயே மீண்டும் வந்து சங்கமிப்பது போல 'ப்ளாஷ் பேக்'கை சொல்லியது தான் கதையின் சிறப்பம்சம். க்ளைமாக்ஸில் நிவின் பாலியின் தலைமுடியை சிலுப்பி விடும் தென்றல் நம்முடைய மனதையும் வருடிச் செல்கிறது.
ஆக..
சின்னச் சின்ன விஷயங்களின் பேரழகை ரசிக்க வைக்கும் மற்றொரு மலையாள அற்புதம்!

