நாங்க என்ன சொல்றோம்னா...: தலைவர் தம்பி தலைமையில்
நாங்க என்ன சொல்றோம்னா...: தலைவர் தம்பி தலைமையில்
PUBLISHED ON : ஜன 18, 2026

கூத்தாடும் குறை குடங்களுக்கு மத்தியில் நிறைகுடம்
ஊரின் பஞ்சாயத்து தலைவரான ஜீவாவுக்கு, படம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டை; தன் சுயநலத்திற்காக ஊரை காவு வாங்கத் துடிக்கும் அவரது போட்டியாளருக்கு கறுப்பு சட்டை; அந்த கறுப்பு சட்டைக்காரனின் வாய் ஜாலத்தால், இவரது வெள்ளை வேட்டி சட்டையில் சேறு படியும் க்ளைமாக்ஸ்; அனுபவம் சுடுவதால் நமக்கு படம் பிடிக்கிறது.
அடுத்தடுத்த வீடுகள்; ஒன்றில் துக்கம்... மற்றொன்றில் திருமணம்; இரண்டு நிகழ்வுகளின் முக்கிய காரியத்திற்கு, இரு வீட்டு தலைவர் களால் ஒரே நேரம் குறிக்கப்பட, பஞ்சாயத்து தலைவரான ஜீவாவின் தலை உருட்டி விளையாடப்படுகிறது. நாம் சற்றும் எதிர்பாராத முடிவை நோக்கி படம் பய ணப்படுவதால், இரண்டு மணி நேர படத்தின் எந்த காட்சியிலும் சலிப்பு தட்டவில்லை!
இளமையின் ஜீவன் வற்றாத ஜீவாவின் முகம், குளிர் தழுவும் நதியோரத்தில் காலாற நடந்தது போன்ற சுகம் தருகிறது. குறிப்பாக, கடைசி காட்சிக்கு முந்தைய அவரது புன்னகை, சல்லென்று வீசப்பட்ட கல்லொன்று குளத்தின் மேற்பரப்பில் தவ்வித் தவ்விச் சென்று தனக்குத் தானே குடமுழுக்கு நடத்திக் கொள்வது போன்று சந்தோஷம் தருகிறது.
இளவரசு, திருமண வீட்டுக்காரர்; தம்பி ராமையா, துக்க வீட்டுக்காரர்; ஒரே இமயம் இரண்டாகி நின்று, 'நடிப்பில் யார் பெரியவர்' என்று மோதிக் கொள்வது போல் காட்சிகள்; இமயத்தின் கரங்கள் நீண்டு இருவித தனிச்சுவைகளில் நமக்கு சர்க்கரை பொங்கல் நீட்டுகின்றன!
இயல்பாக அங்குமிங்கும் ஜீவா அலைவது நடிப்பாகத் தெரிவதும், அப்படம் 'சூப்பர் குட் பிலிம்' ஆக மாறுவதும் கலைத்தாய் அவருக்கு அளித்திருக்கும் வரம். கிட்டத்தட்ட இப்படத்தின் எல்லா காட்சிகளிலும் அவர் அப்படி அலைவதாலும், நிதிஷ் சகாதேவின் நேர்த்தியான இயக்கத்தாலும் நம் மனம் நிறைகிறது.
ஆக...
உண்மை எளிமையாய் அழகாய் இருக்குமாம்; ஆம்... ரசிக்கும்படியும் இருக்கிறது

