நாங்க என்ன சொல்றோம்னா...: வலது வஷத்தே கள்ளன் (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: வலது வஷத்தே கள்ளன் (மலையாளம்)
PUBLISHED ON : பிப் 01, 2026

பல வலை... ஒரு மீனுக்காக!
'சிதைக்கப்பட்ட பெண் உடலை தடயங்கள் சிக்காத அளவிற்கு மழையும், நாய்களும் சின்னாபின்னமாக்க, அந்த குரூரத்தைப் பார்க்கும் மூளைக்கார தந்தையின் கோபம் என்னென்ன செய்யும்' என இம்முறை யோசித்திருக்கிறது த்ருஷ்யம் ஜீத்து ஜோசப்பின் மூளை.
குற்றவாளியை கண்டுபிடிக்க தந்தைக்கு சிரமம் தராத திரைக்கதை. தந்தையை அக்குற்றவாளி மிரட்டவில்லை; குற்றவாளியை தந்தை தாக்கவில்லை; ஆனால், குற்றம் செய்தவன் காட்சிக்கு காட்சி துடிக்கிறான். தனக்கு வலை விரிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதில் துவங்கி, அடுத்தடுத்த வலைகளை அவனே தேடுவதாகவும், அதை கண்டுபிடித்த கணத்தில் அது அவனை சிறைபிடிப்ப தாகவும்... அட்டகாசமான கற்பனை!
'ஒருமுறை பார்த்தால் பிடிக்கும்; இருமுறை பார்த்தால் மட்டுமே புரியும்' வகையறா படைப்பு இது; 'அடுத்தவனின் திறமையை, சந்தோஷத்தை காணச் சகிக்காத நோய் உள்ளிட்ட சில மனநோய்கள் எவ்விதமான வன்மம் கக்கும்' என்பதைச் சொல்லும் காட்சிகள், காயப்பட்ட மனங்களுக்கு மட்டுமே பிடிக்கும்; இரண்டாவது முறை பார்த்தால், இந்த அனுபவம் இல்லாதவர்களுக்கும் புரியும்!
'வழக்கமானதில் இருந்து எப்போதும் வித்தியாசப்பட வேண்டும்' என்பதில் பிடிவாதமாய் இருந்து கலைக்கு மரியாதை செய்யும் இயக்குனர் ஜீத்து ஜோசப், இதில் அடுத்தபடி ஏறி நிற்கிறார்; இதற்கான சாட்சி... குற்றங்களை குற்றவாளி ஒப்புக்கொள்ளும் இடத்தில், அதற்கு காரணமான அதிகார வர்க்கத்தின் முகத்தில் வழியும் குற்ற உணர்வு!
'எந்த தந்தை கொண்டிருந்தது சிறந்த பாசம்' என்பதற்கான ஒரு கேள்வி அரங்கை விட்டு எழும்முன் எழுகிறது; இது, இயக்குனருக்கான இன்னொரு வெற்றி. ஆமாம்... தன் மகளின் மரணத்திற்கு ஈடாக அத்தந்தை கேட்பது குற்றவாளியின் மகன் உயிர்!
'சிக்கியதா சிறுமீன்' என்பதற்கு பதில் சொன்னால் அது கலைக்கொலை; செய்யாது அவியல்.
ஆக...
'குற்றங்களை மறைப்பதும், குற்றவாளிகளை காப்பதுமே காவல்' என்போர் தவிர்த்து விடுங்கள்

