PUBLISHED ON : மார் 22, 2026

'கொலையாளி யார்' என கணிக்க வாய்ப்பளிக்காத 'த்ரில்லர்'
'கொலையாளி ஆணா, பெண்ணா என்பதை இடைவேளை வரையிலுமோ, 'க்ளைமாக்ஸ்' வரையிலுமோ மறைத்து வைக்கும் 'புலனாய்வு' கதைகள் ஒருவிதம்; கொலையாளி ஆணா, பெண்ணா என்பதை துவக்கத்திலேயே சொல்லி, விசாரணையை விறுவிறுப்பாக்கும் கதைகள் மற்றொருவிதம்; இது, இரண்டாவது ரகம்!
'கொலை நடந்த இடத்துல கிடைச்ச சிகரெட் துண்டுல லிப்ஸ்டிக் ஒட்டியிருக்கு சார்' என்று உதவி காவல் ஆணையர் ஸ்டாலின் ஜோசப்பிடம் தகவல் பரிமாறப்பட்டதும், 'அது நம்மளை திசை திருப்புற உத்தியா கூட இருக்கலாம்' என அவர் கடந்து விடுகிறார். 'சார்... உங்க கணிப்பு தப்பு' என்கின்றன அடுத்தடுத்த கொலைகள்!
'அவள் ஏன் கொலை செய்தாள்' என்பதை ஸ்டாலின் ஜோசப் கண்டு பிடிக்க, இயக்குனர் ஜிதின் சுரேஷ் அவரை நன்றாக வேலை வாங்கி இருக்கிறார்; ஒரு கொலையில் ஒளிந்திருக்கும் அடுத்த கொலைக்கான துப்பு, கொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலில் வரும் புகைப்படம் என, நிறைய சம்பவங்களை திரைக்கதையின் வழிநெடுக தோரணமாக்கி இருக்கிறார்.
'மியூசிக்கல் சேர்' விளையாட்டு போல ஒவ்வொரு பெண் பாத்திரத்தின் மீதும் சந்தேக நிழல் மாறி மாறி படர்ந்து கொண்டே இருக்கிறது. கொலையாளியின் கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே 'ப்ளாஷ்பேக்'கை சொல்லாமல், அதை பல பாத்திரங்களுக்கும் பகிர்ந்து அளித்தவிதத்தால் சுவாரஸ்யத்தின் ஈரம் துளியும் குறையவில்லை!
'அன்று என்ன நடந்திருக்கும்' என்பதை கற்பனையில் காட்சிகளாக ஓட்டிப் பார்க்கும் மெமரிஸ் பிருத்விராஜ் சுகுமாறனை, ஸ்டாலின் ஜோசப்பாக வரும் இந்திரஜித் சுகுமாறன் பிரதி எடுத்திருக் கிறார்; இந்த நகலும் நன்றாகவே இருக்கிறது எனினும், 'ஏன் இவ்வளவு மெத்தனம்' என்று தோன்றும் அளவுக்கு சில இடங்களில் மட்டும் விசாரணை பல்லிளிக்கிறது.
'கொலைகள் எப்படி, யாரால், ஏன் நடக்கின்றன' என்கிற முடிச்சுகள் சரியான இடைவெளியில் அவிழ்க்கப்படுவதால் இறுதி வரை நமக்கு துளியும் ஏமாற்றம் இல்லை.
ஆக...
'ஜோசப் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார்' என்பதற்கு இணையான செம 'த்ரில்லர்'

