PUBLISHED ON : ஜன 18, 2026

'தீயசக்தி' தேள் எனில், இது பாம்பு
படமாடா இது; கலைக்கு 'திராவிட குளியல்' நடத்தி கன்றாவியான படைப்புகளை தமிழ் திரையுலகம் அரங்கேற்றி வரும் இன்றைய சூழலில், 'இதென்ன பிரமாதம்... இதைவிட ஸ்பெஷல் அயிட்டம் ஒன்னு இருக்கு' எனும்படியாக, கலைக்கு 'திராவக குளியல்' நடத்தியிருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி.
தெறித்து விழும் திராவகத்துளிகள் நம் ரசனையை பொசுக்குகின்றன; குறிப்பாக, எம்.ஜி.ஆர்., ரசிகனுக்கு இது ஆறவே ஆறாத ரணம்!
கதை துவங்குவதற்கு முன் எம்.ஜி.ஆர்., பற்றி சுருக்கமான வரலாறு போன்று ஒன்று சொல்லப்படுகிறது. அதில், திரையில் ஒளிரும் தி.மு.க., எனும் பெயரை உச்சரிக்காது தவிர்க்கும் விதத்தில் துவங்கு கிறது கோமாளித்தனம்!
தமிழ் சினிமா கண்டிராத காக்கி சட்டை அணிந்து காவல் அதிகாரியாய் கார்த்தி வருவதெல்லாம், 'காட்டு மிராண்டி' கற்பனை. 'சரி... உடைதான் இப்படி; பாத்திரத்தின் நடத்தையாவது லட்சணமாக இருக்கிறதா' என்றால், 'கட்சியினர் விரும்பியதால் என் மகனை என் இருக்கை யில் அமர வைக்கிறேன்' என அடிக்கடி தமிழகம் பார்க்கும் 'குறளி வித்தை'யை மிஞ்சி நிற்கிறது அது!
கெட்ட போலீஸ்காரன் தனக்குள் எம்.ஜி.ஆர்., ஆன்மா புகுந்ததால் நல்லது செய்வதாக சொல்ல வந்த கதை, 'டாஸ்மாக்'கில் கண்டதையும் கலந்து குடித்தவன் எடுக்கும் 'உவ்வ்வேவே...' வாக நிறைவுறுகிறது.
சத்யராஜ் பாத்திரமெல்லாம், '200 ரூபாய்' கட்சிக் கூட்டங்களுக்கு போய் தற்குறித்தனமாய் பேசிவிட்டு வருவதன் நகல்; இந்த பாத்திரம்தான் அந்த கெட்ட போலீஸ்காரனை இயக்கும் அதிகார வர்க்கமாம்! ம்ஹும்... விஜய் டிவி 'மிமிக்ரி' கலைஞர்களின் நிழலைக்கூட நெருங்கவில்லை கார்த்தியின் மாறுவேடப் பரிமாணம்!
'என் குடும்பமே முக்கியம்' என்று வாழ்ந்தவரின் வேடமிட்டு வந்து எம்.ஜி.ஆர்., நின்றால் தமிழக மக்கள் துடித்துப் போய்விட மாட்டார்களா; அப்படி நாம் துள்ளத் துடிக்க, கார்த்தி மூலம் கொத்தி இருக்கிறார் நலன் குமரசாமி.
ஆக...
ஊசி குத்தப்பட்ட 'செய்வினை பொம்மை' போல் இருக்கிறது படம் பார்த்த மனசு

