PUBLISHED ON : டிச 21, 2025

'இந்த கிறுக்கு பயலுககிட்டே மாட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே!'
நாமறிந்த அரசியல் தலைவர் அ டிக்கடி சொல்லும் இந்த புகழ்பெற்ற 'மீம்ஸ்' வசனமே இக்கதையின் சுருக்கம். மனநல காப்பகத்தில் இருந்து தப்பிக்கும் ஒருவன், பொதுக்கூட்டத்தில் இருந்து மாநில முதல்வரை கடத்துகிறான். இச்செயலுக்கு மனநலம் பாதித்த சில கூட்டாளிகள் துணை. 'இந்த கடத்தல் எதற்காக' என்பதை 150வது நிமிடத்தில் சொல்லி நம்மை கிறுகிறுக்க வைக்கிறது திரைக்கதை!
திலீப்தான் முதல்வரை கடத்தும் ஆசாமி; வாழைப்பழ தோல் வீசி தன்னை விழ வைக்க முயற்சிப்பவரிடம், 'அதெல்லாம் அந்த காலம்' என 'பஞ்ச்' பேசி அறிமுகம் ஆகிறார்; 'உன்னை மாதிரி பலபேரை பார்த்தவன் நான்; இது எனக்கான காலம்; என் ஆட்டம் ஆரம்பமாயிருச்சு' என்று பல அறிக்கைகளை தொடர்ந்து வீசுகிறார். 'ரஜினிகாந்த் வசனங்கள், விஜய் மேற்கோள்கள் போதாது' என்று சில காட்சிகளில் வந்து போகும் மோகன்லால், திலீப்பை வாரி அணைத்துக் கொஞ்சுகிறார்.
தவசி படத்தில் மனநலம் பாதித்தவராக வரும் கிருஷ்ணமூர்த்தி, 'நான் நார்மலா இருக்கேன் சார்' என்று வடிவேலுவை நம்ப வைத்து, பின் அவர் சட்டையை கிழித்து தொங்கவிடுவது போன்றே இருக்கின்றன திலீப் வரும் காட்சிகள்; இப்படியான பாத்திரத்திற்கு ஜோடியாக பெண் பாத்திரத்தை கோர்த்து பாவம் சேர்க்கவில்லை என்பது சிறு ஆறுதல்!
'கிறுக்குத்தனமான உலகிற்கு வரவேற் கிறோம்' எனும் அறிவிப்புடன் துவங்கும் இக்கதையுடன் எந்தவகையிலும் ஒன்றிப்போக இயலவில்லை. 'வசமா வந்து சிக்கிட்டீங்க... அம்புட்டு பேரும் செத்தீங்கடா' என்று திலீப்பும், இயக்குனர் தனஞ்ெஜய் ஷங்கரும் இரண்டரை மணி நேரம் நம்மை வகை வகையாய் வதைத்து அனுப்புகின் றனர்.
ஆக..
மக்களே... குறித்துக் கொள்ளுங்கள்; 'மலையாளப் படம் நன்றாக இல்லை' என்று விமர்சனம் செய்திருக்கிறோம்!

