நாங்க என்ன சொல்றோம்னா...: தி ராஜா சாப் (தெலுங்கு)
நாங்க என்ன சொல்றோம்னா...: தி ராஜா சாப் (தெலுங்கு)
PUBLISHED ON : ஜன 11, 2026

தெலுங்கு படங்களை ரசிக்கும் தமிழர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
'தெலுங்கு மசாலா பகவந்த் கேசரி மீது தமிழ் மசாலா துாவிய பொங்கல்' என்று சொல்லப்படும் ஜனநாயகன் சுவைக்க நினைத்த நமக்கு, 'வாய்ப்பில்லை ராஜா' என்று சொல்லிவிட்டது திரைப்பட தணிக்கை வாரியம். ஆனாலும், இவ்வாரம் தெலுங்கு மசாலாவை தேடிப்போய் நம் வயிறு எரிய வேண்டும் என்பது விதி போலும்!
'மறதி நோய்' பாட்டியுடன் வாழும் பேரன் ராஜுவுக்கு, காணாமல் போன தன் தாத்தாவை தேடிப்பிடித்து பாட்டியுடன் வாழ வைக்க ஆசை. தாத்தா குறித்து துப்பு கிடைத்து தேடிப்போனால், அவர் இறந்து போய் துஷ்ட ஆன்மாவாக உலவிக் கொண்டு இருக்கிறார். தாத்தா - பேரன் இடையிலான அமானுஷ்ய சண்டை மிச்ச சொச்சம்!
படத்தில் நித்ஹி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் என மூன்று நாயகியருக்கு தலா ஒரு டூயட் எனும்போது, நமக்குள் 'கண்ணா... மூணு லட்டு தின்ன ஆசையா' என்றொரு குரல்; ஆனால், மூவருடன் வரும் பிரபாஸின் நடனமோ நம் கண்ணில் சாத்துக்குடி தோலை நசுக்கி விடுகிறது.
பாடல் காட்சிதான் இப்படி ஏமாற்றிவிட்டது; அமானுஷ்யம், பழிவாங்கல் விஷயத்தில் நம் பங்காளிகள் 'ஜித்து ஜில்லாடிகள்' என்று நினைத்தால், அதிலும் பெரும் குழி பறிப்பு; படுமோசமான வி.எப்.எக்ஸ்., வேலைப்பாடு, மரண பயம் தரும் காமெடிகள் மூலம் அப்படு குழியினுள் நம்மைத் தள்ளி விடுகின்றனர்.
அந்த குழிக்குள், 'மாளவிகா மோகனனுக்கும் பிரபாஸுக்கும் கதையில் என்ன உறவு; 'மனோவசிய முறையில் இதெல்லாம் சாத்தியமா' என்று பல 'லாஜிக்' பாம்புகளின் மூலம் நம் மூளையை கொத்த வைக்கிறார் இயக்குனர் மாருதி.
பாட்டு, காமெடி, சென்டிமென்ட் என ஏதேனும் ஒன்றில், 'டிக்' பெறுபவை தெலுங்கு படங்கள்; இதில் எல்லாவற்றிற்கும் 'பெருக்க ல்' குறிதான்.
ஆக..
பாகுபலி முதுகில் கட்டப்பா குத்தியதன் வலியை உணர விரும்புவோரே... வருக... வருக

