PUBLISHED ON : மார் 23, 2026

நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு, உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களில் ஒருவன். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்துக் களங்களிலும் சிறந்து விளங்கினேன். இந்திய கிரிக்கெட் வரலாறு, என்னால் புது வெளிச்சம் பெற்றது. ஒரு வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்கு நான் பலம் சேர்த்து இருக்கிறேன்.
நான் ஒரு போதும் விளையாட்டைச் சுமையாக நினைத்ததில்லை. நாங்கள் விளையாடிய காலத்தில் ஏசி வசதி கூட கிடையாது. போதிய பணமும் கிடையாது. ஆனால் இப்போது விளையாடும் வீரர்களுக்கு எல்லா வசதிகளும் உள்ளன. அப்படி இருக்கும்போது, கிரிக்கெட்டில் மன அழுத்தம் என்று சொல்வதை ஏற்க முடியாது. கிரிக்கெட்டை ரசித்து, விளையாட வேண்டும். எப்போது அதை ஒரு வேலையாகப் பார்க்கத் தொடங்குகிறோமோ, அப்போதுதான் அழுத்தம் உருவாகிறது. கிரிக்கெட்டில் மன அழுத்தம், மனச்சோர்வு என எதுவுமில்லை. அது ஓர் அமெரிக்க வார்த்தை. அவ்வளவுதான்.
இந்திய கிரிக்கெட் வாரியம், இளம் வீரர்களைப் புறக்கணிப்பதைக் கண்டித்துதான், இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) என்ற அமைப்பைத் தொடங்கினேன். இதற்குப் போட்டியாகத்தான், கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். (IPL) அமைப்பைத் தொடங்கியது. என்னுடைய முயற்சி, வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சியே.
நான் 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறேன். ஒன்றில் கூட ரன் அவுட் ஆனதில்லை. அதே போல் நான் ஆடிய 16 ஆண்டுகளில், எந்தக் காரணத்திற்காகவும் விளையாடாமல் ஓய்வு எடுத்ததில்லை. 2002-ஆம் ஆண்டு 'விஸ்டன்' (Wisden) அமைப்பு என்னை, 'நூற்றாண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக' கௌரவித்தது.
பை காட்ஸ் டிக்ரி (By God's Decree -1985)
கிரிக்கெட் மை ஸ்டைல் (Cricket My Style- 1987)
ஸ்டிரைட் ஃபிரம்த ஹார்ட் (Straight from the Heart -2004) ஆகிய சுயசரிதை நூல்களை வெளியிட்டுள்ளேன்.
நான் யார்?
விடைகள்: கபில்தேவ்

