சரித்திர சங்கமம்: மூன்றாயிரம் ஆண்டு முதுமக்கள் சின்னம்
சரித்திர சங்கமம்: மூன்றாயிரம் ஆண்டு முதுமக்கள் சின்னம்
PUBLISHED ON : செப் 08, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைந்துள்ளன ஏரிப்பட்டறை, பூங்குளம், ரங்கசமுத்திரம் கிராமங்கள். இந்தக் கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள மலையை 'நாழிக்கல்' என்று அழைக்கின்றனர். இந்த மலையின் உச்சியில் நீண்ட சமவெளியிலான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதை 'பஞ்சப் பாண்டவர் பாறை' என்று அந்த ஊர் மக்கள் அழைக்கின்றனர். இந்தப் பாறையில்தான் நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் அமைந்துள்ளன.
'வரலாற்றைப் பழைய கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், இரும்புக் காலம் என வகைப்படுத்துவர். இந்தக் கல்திட்டைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை. அதாவது இரண்டாயிரத்து ஐந்நூறு முதல் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானவை' என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறுகிறார்.
'தமிழகத்தின் வட மாவட்டங்களில் இதுபோன்ற கல்திட்டைகள் அதிக அளவில் உள்ளன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் காடு, மலைகளில் வசித்தனர். இவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே, இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையைக் கொண்டிருந்தனர்.
இறந்தவர்களைச் சதுரமான கற்களைக்கொண்டு, மூன்று அல்லது நான்கு பக்கமும் சுவர் போல் அமைப்பார்கள். அந்த அறைக்குள் இறந்த உடலுடன் இடுபொருட்களையும் வைத்து விட்டு மேல்பகுதியை, பெரிய பலகைக் கல்லால் மூடி விடுவார்கள். இதுதான் பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை. இந்தத் திட்டைகளின் கிழக்குப் பக்கத்தில் ஓர் இடுதுளையை வைப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை இங்கு இடுபொருட்களை வைத்து போற்றுவார்கள். சிறு குன்றுகள், மலை முகடுகளில் இதுபோன்ற கல்திட்டைகள் காணப்படும்' என்கிறார் சாந்தலிங்கம்.
இந்த ஈமச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் ஆங்காங்கே நீர் நிரம்பிய சுனைகளும், தங்குவதற்கான குகைகள், நிழலுடன் கூடிய பாறைக் குன்றுகளும் அமைந்துள்ளன. கல் திட்டைகளின் அருகே பெரிய பள்ளத்தாக்கு ஒன்று உள்ளது. அதை 'பாண்டு ராஜா பள்ளம்' என்று கூறுகின்றனர்.
மலையைச் சுற்றி உள்ள கிராமத்து மக்கள், மூன்றாயிரம் ஆண்டு வரலாறு தெரியாமல் ஆடு, மாடுகள் மேய்க்கச் செல்லும் போது, இந்த ஈமச் சின்னங்களை, உடைத்து சிதைக்கின்றனர் என்பதுதான் பெருந்துயரம்.