PUBLISHED ON : டிச 22, 2025

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது, ஹளேபேடு. இது ஹொய்சாளர்களின் தலைநகராக இருந்தது. 12ஆம் நூற்றாண்டில் துவாரசமுத்திரம் என்று அழைக்கப்பட்டது. இங்கு சிற்பங்கள் நிறைந்த ஹொய்சாலேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் பொ.யு. 1121இல் ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 80 ஆண்டுகள் இந்தக் கோயிலில் பணிகள் நடந்த வண்ணம் இருந்தன.
மேடை போன்ற அமைப்பில், கோயில் அமைந்துள்ளது. இரண்டு கருவறைகளைக் கொண்டுள்ளது. ஒன்று மன்னர் பரம்பரையின் பெயரால் ஹொய்சாளேஸ்வரர் என்றும், மற்றொன்று விஷ்ணுவர்த்தன் மனைவி, சாந்தலா தேவியின் பெயரால் சாந்தலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சிற்பங்கள் 'குளோரிடிக் ஷிஸ்ட்' (Chloritic Schist) எனப்படும் மென்மையான (Soap stone) கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல் நுணுக்கமான சிற்பங்கள் செதுக்க ஏதுவானது. செதுக்கும்போது, நெகிழ்வு தன்மைக் கொண்ட இந்தக் கல், நாள்பட கெட்டித் தன்மையை அடைந்துவிடும்.
சுவர்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள், புராணக் கதைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள் உள்ளன. அனைத்துச் சிற்பங்களும் தத்ரூபமான உடல் அமைப்போடும், நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை, ஆபரணங்களோடும் காட்சியளிக்கின்றன.
பொ.யு. 1311இல் டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர், இந்தக் கோயிலைத் தாக்கி, அங்கிருந்த தங்கம், நவரத்தினங்களைச் சூறையாடினான். மாலிக்காபூரின் தாக்குதலால் கோயிலின் கோபுரங்கள் சிதைக்கப்பட்டன. பல சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன. அதனால் கோயில் இன்றும் கோபுரம் இன்றி காட்சியளிக்கிறது.ஹளேபேடு, பேலூரில் உள்ள கோயில் பெண் சிற்பங்களைச் செதுக்குவதற்கு, அரசி சாந்தலா தேவி மாதிரியாக நின்றதாகக் கூறப்படுகிறது. அவர் பரத நாட்டியம் தெரிந்தவர்.
படையெடுப்பால் சிதைவுற்று பாழடைந்ததால், 'துவாரசமுத்திரம்' என்ற பெயர் மறைந்து, 'ஹளேபேடு' என்று அழைக்கப்படுகிறது. இதற்குப் பழைய வீடு என்று பொருள்.இந்தக் கோயிலின் ஈடு இணையற்ற சிற்பக்கலைக்காக, 2023ஆம் ஆண்டு, யுனைஸ்கோ, உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.

