PUBLISHED ON : டிச 29, 2025

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடகத்தின் ஒரு பகுதியை ஹொய்சாள (Hoysala) மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பிட்டிக தேவா (Bittiga Deva). இந்தப் பெயர், அவர் சமண மதத்தைப் பின்பற்றி இருந்தபோது வழங்கிய பெயர்.
வைணவ மதத்திற்கு மாறிய பின், அவரது பெயர் விஷ்ணுவர்த்தன் என்றானது. தன்னுடைய நாட்டில் பேளூர் பகுதியில், சென்ன கேசவ பெருமாள் என்னும் கோயிலைக் கட்டினார், விஷ்ணுவர்த்தன். அந்தக் கோயிலில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் சிற்பங்கள், காண்போரையும் சிலையாக்கும் வல்லமை கொண்டவை.
இந்தச் சிலைகள் மதனிகா (பேரழகி) அல்லது சிலாபாலிகா (கல்லால் ஆன என்பது பொருள்) என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. சிலைகள் பெண்களின் அங்க அசைவுகளையும், அவர்கள் அணிந்திருக்கும் மெல்லிய ஆபரணங்களையும் தத்ரூபமாகப் பிரதிபலிக்கின்றன. பெண்களின் கைவிரல் நகம் முதல், காலில் அணிந்திருக்கும் மெட்டி வரை நுணுக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அருகில் உள்ள கண்ணைப் பறிக்கும் சிற்பங்களில் ஒரு பெண் தன் அழகைக் கண்ணாடியில் பார்க்கிறாள். மற்றொரு படத்தில் இருபெண்கள் மரத்தடியில் நிற்கிறார்கள்.

