PUBLISHED ON : அக் 27, 2025

இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் மன்னர்கள். ஏழு ஸ்வரங்களை எழுப்பும் விதமாகக் கோயில்களில் இசைத்தூண்கள் அமைத்தனர். அவ்வாறு தூண்கள் அமைக்கப்பட்ட கோயில்களில் ஒன்று கர்நாடகத்தில் உள்ள ஹம்பி விட்டலா கோயில். கைகளால் தூண்களைத் தட்டினாலே வெவ்வெறு விதமான ஒலிகள் எழுகின்றன.
அது போலவே தமிழகத்தில் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில் இசைப்படிக்கட்டுகளைக் குறிப்பிடலாம். இந்தப் படிக்கட்டுகளும் ஏழு ஸ்வரங்களை எழுப்பக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும் இசைத் தூண்கள் உள்ளன.
பேரரசுகள் மட்டும் அல்ல, சில சிற்றரசர்களும் இசையைத் தாங்கள் அமைத்த கலைவடிவங்களில் புகுத்தி, புதுமை காட்டியுள்ளனர். அவ்வாறு புதுமை காட்டிய சிற்றரசர்களில் குறிப்பிடத் தக்கவர் காடவராய மன்னர் கோப்பெருஞ்சிங்கன். இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே அமைந்துள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் காடவராயர்கள். அந்தப் பரம்பரையில் வந்தவர் இவர். காடவராயர்கள் பல்லவர்களின் வழித் தோன்றல் என்று, மறைந்த தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் குறிப்பிடுகிறார்.
காடவராய மன்னர் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் குலோத்துங்கனின் மருமகன். சேந்தமங்கலத்தில் வாள்நிலைகண்டீஸ்வரம் என்னும் கோயிலைக் கட்டியவர் கோப்பெருஞ்சிங்கனின் தந்தை மணவாளப்பெருமாள். தற்போது ஆபத்சகாயீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
கோயிலுக்கு எதிரே குடியிருப்புகளைத் தாண்டி, இரண்டு கற்குதிரைகள் அமைந்துள்ளன. இந்தக் குதிரைகளை அமைத்தவர் கோப்பெருஞ்சிங்கன். குளத்துக்கு அருகே பெரிய மண்டபம் கட்டி இந்தக் குதிரைகளை அமைத்துள்ளார். தற்போது மண்டபங்கள் இல்லை. குளமும் புதர் காடாகக் காட்சி அளிக்கிறது.
குதிரைகளின் முதுகில், முகத்தில், காலில், தலையில் எங்கு தட்டினாலும் வெவ்வேறு வகையான இசைக்குறிப்புகள் (ஒலிக்குறிப்புகள்) வருகின்றன. இரண்டு தனித்தனி கற்களைக் கொண்டு செதுக்கப்பட்ட குதிரைகள் இவை.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இசைக்குதிரைகளைப் பார்க்கச் செல்லும் வழி எங்கும் மனிதக் கழிவுகள் முகம் சுழிக்க வைக்கின்றன. குதிரைகளைச் சுற்றிலும் முள் வேலி அமைத்திருந்தாலும் முட்செடிகளும், புதர்களும் மண்டியுள்ளன. இப்படி ஒரு வரலாற்றுச் சின்னம் இருப்பதற்கான அறிவிப்புப் பலகைக் கூட சாலையில் எங்கும் இல்லை.

