சரித்திர சங்கமம்: பழமலையானும் அவனியாளப் பிறந்தானும்
சரித்திர சங்கமம்: பழமலையானும் அவனியாளப் பிறந்தானும்
PUBLISHED ON : மே 18, 2026

கோப்பெருஞ் சிங்கன் என்னும் சிற்றரசர் இருந்தார். தற்போதுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். அவர் முதலில் சோழர்களுக்கு அடங்கிய மன்னராக இருந்தார். மூன்றாம் குலோத்துங்கனின் மகளைத் திருமணமும் செய்திருந்தார். பல போர்களில் சோழர்களின் சார்பில் பங்கெடுத்து வாகையும் சூடியிருக்கிறார்.
பிற்காலத்தில் சோழ அரசன் மூன்றாம் ராசராசனையும் கைது செய்து சிறையில் அடைத்தார். கோப்பெருஞ்சிங்கன் ஏதோ ஒரு போரில், பலரைக் கொன்றுவிட்டார். அந்தப் போரின் பாதிப்பு அவர் மனத்தைப் போட்டு அரித்துக்கொண்டே இருந்தது. உயிர் இழப்புகள் அவர் உள்ளத்தை வாட்டி எடுத்தது. அதனால் நிம்மதித் தேடி திருமுதுகுன்றம் கோயிலுக்கு வந்தார்.
தான் போர்க்களத்தில் பலரைக் கொன்ற பழி நீங்குவதற்காக, கோயிலில் உள்ள, பழமலைநாதருக்கு வைரமுடி (கிரீடம்) ஒன்று செய்து, அதற்கு 'அவனியாளப் பிறந்தான்' என்று பெயரும் சூட்டினார். தவிரவும், சுவாமிக்கு பொன்னாலான மாங்காய் மாலையும் செய்து அணிவித்தார். விளக்கு எரிக்க ஆடு, மாடுகளையும் வழங்கினார். அந்தக் கோயில் எது தெரியுமா?
1813 முதல் 1826 வரை தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சார்லஸ் ஹைட் (Charles Hyde). இந்த ஊர் கோயில் தேர் இழுக்க, இரும்புச் சங்கிலியும், கும்ப தீபாராதனைக்காக வெள்ளிக் குடமும் வாங்கித் தந்துள்ளார். கோயிலின் ஒரு பகுதிக்குத் தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். இவரின் பெயரால், இன்றும் இவ்வூரில் (ஹைட் துரை) ஒரு சத்திரம் உள்ளது.
காசியை விட பழமையானது என்ற பொருளில் 'விருத்தகாசி' என்று இந்த ஊர் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நிலங்களில், பண்டைய காலத்தில் நெல் விளைச்சல் அதிகமாக இருந்ததால், நெற்குப்பை என்றும் ஊரின் பெயரை, கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, கண்டராதித்தன் கோபுரம் என ஐந்து கோபுரங்கள் இந்த ஊர் விருதகிரீஸ்வரர் கோயிலில் உள்ளன.
திருமுதுகுன்றம், விருத்தகாசி, நெற்குப்பை, முதுகிரி என்ற பெயர்கள் இந்த ஊருக்கு இருந்தாலும், தற்போது வழக்கில் வேறு பெயர் உள்ளது. அந்தப் பெயர் என்ன?
விடை: விருதாச்சலம்
