சரித்திர சங்கமம்: குளிக்கும் போதும் கொடை கொடுத்த மன்னன்
சரித்திர சங்கமம்: குளிக்கும் போதும் கொடை கொடுத்த மன்னன்
PUBLISHED ON : பிப் 16, 2026

மன்னர்கள் தானம் கொடுப்பதற்கு நேரம், காலம் பார்ப்பது இல்லை. அவர்கள் எங்கிருந்தாலும் தானம் கொடுக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்துள்ளனர். இதற்கு சில செப்பேடுகள் சான்றாக உள்ளன. 'ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து எயில்கோட்டது நகரம் காஞ்சிபுரத்து நம் வீட்டின் உள்ளால் நாம் குளிக்குமிடத்துத் தானம் செய்யாவிருந்து' என்பது ராஜேந்திர சோழனின் எசலாம் செப்பேடு கூறும் தகவல். இந்தச் செப்பேட்டில் அவர் எங்கிருந்து தானம் அளித்தார் என்ற தகவலும் உள்ளது.
ஜெயங்கொண்ட சோழ மண்டலம் - இது தொண்டை மண்டலத்திற்கு வழங்கப்பட்ட பெயர். எயில்கோட்டம் - இது காஞ்சிபுரத்தை உள்ளடக்கிய ஒரு நிர்வாகப் பிரிவு. மன்னரின் குருவான சர்வசிவ பண்டிதர், விழுப்புரம் மாவட்டம், எசலாத்தில் ஒரு கோயிலைக் கட்டினார். அந்தக் கோயிலின் வழிபாட்டுச் செலவுகளுக்காக மன்னர் நிலங்களைத் தானம் வழங்கினார். நிலத்தைத் தானம் கொடுத்தபோது, மன்னர் குளித்துக்கொண்டிருந்தார். இதையே இந்தச் செப்பேடு குறிப்பிடுகிறது.
அரசர்கள் வழக்கமாக அரியணையில் அமர்ந்துதான் அரசாணைகளை வெளியிடுவார்கள். ஆனால், தனது குருவின் மீதிருந்த பற்றால், தான் நீராடிக் கொண்டிருந்த வேளையிலும் ராஜேந்திர சோழன் நில தானம் வழங்கி உள்ளார். அலுவல் சம்பந்தமாக அரசரை, நிர்வாகத்தினர் எந்த நேரத்திலும் சந்திக்கலாம் என்பதும் தெரிய வருகிறது.
எசலாம் செப்பேடு 15 ஏடுகளைக் கொண்டது. நான்கு ஏடுகள் சமஸ்கிருதத்திலும் மற்றவை தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. சமஸ்கிருத செப்பேட்டில், மன்னர் மகாசாலையில் இருந்தபோது அந்தணர்களுக்கு நில தானம் வழங்கியதை கூறுகிறது.
முதலாம் குலோத்துங்கன், காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலுக்கு தானம் வழங்கி உள்ளார். இதை 'காஞ்சி சோழன் திருமாளிகையில் வடபக்கத்து ராசராச மண்டபத்து பள்ளிக் கட்டிலில்' இருந்தபோது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரண்மனையில் 'ராசராச மண்டபம்' என்ற பெயரில் ஒரு பெரிய கூடம் இருந்ததையும், அங்கு மன்னர் ஓய்வெடுக்கும் 'பள்ளிக் கட்டில்' இருந்ததையும் அறிய முடிகிறது. உத்தமசோழன், காஞ்சியின் தென்புறத்தில் சித்திரமண்டபத்தில் இருந்தபோது, காஞ்சி ஊரகப் பெருமாளுக்கு தானம் வழங்கி உள்ளார்.
மன்னர்கள் ஓய்வு நேரத்திலும் அறப்பணிகள் மேற்கொண்டதை இந்தத் தகவல்கள் காட்டுகின்றன. காஞ்சி சோழர்களின் முக்கிய நிர்வாக நகரமாக இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.
மானம்பாடி (கும்பகோணம்) நாகநாதசாமி கோயிலில் உள்ள ராஜேந்திரனின் புடைப்புச் சிற்பம்.

