சரித்திர சங்கமம்: சிவாலயங்கள் எழுப்பிய வியட்நாம் மன்னர்கள்
சரித்திர சங்கமம்: சிவாலயங்கள் எழுப்பிய வியட்நாம் மன்னர்கள்
PUBLISHED ON : மே 04, 2026

யாங்கபே ங் போ இனு நகர் (Yang Po Imu Nagar) என்பது வியட்நாமில் உள்ள ஒரு பழைமையான ஹிந்து கோயிலின் பெயர். அந்த நாட்டின் நா திராங் (Nha Trang) நகரில், ஒரு சிறிய குன்றின் மீது இந்தக் கோயில் அமைந்துள்ளது.
'யாங்' என்பது தெய்வத்தைக் குறிக்கும். 'போ' என்றால் தலைவி, 'இனு' என்றால் தாய், 'நகர்' என்றால் நாடு. ஆக, 'நாட்டிற்கு அன்னையாக இருக்கும் தெய்வம்' என்ற பொருளில் இந்தக் கோயிலுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பெண் தெய்வம் 'பகவதி' அல்லது 'துர்க்கை என்று கூறப்படுகிறது.
வியட்நாமில் உள்ள ஹிந்துக் கோயில்களை எழுப்பியவர்கள் சம்பா (Champ Kings) மன்னர்கள். ஹிந்து மதம் அங்கே பொ.யு. 4ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சி இருந்தது.
ஜாவா நாட்டைச் சேர்ந்தவர்கள் கோயிலைச் சேதப்படுத்திய பிறகு, பொ.யு. 781இல் சத்யவர்மன் (Satyavarman) என்ற சம்பா மன்னர் இந்தக் கோயிலைப் புதுப்பித்துள்ளார். அதன் பிறகு, முதலாம் ஹரிவர்மன் (Harivarman I 802-817) காலத்தில் முக்கிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கம்போடியாவின் கெமர் மன்னர்கள் கோயிலின் தங்கச் சிலையைக் கொள்ளையடித்துச் சென்ற பிறகு, சம்பா மன்னர்கள் புதிய சிலைகளை நிறுவினர். அதில் ஒன்று கருங்கல் சிலை, மற்றொன்று பொன் முலாம் பூசப்பட்ட சிலை.
வியட்நாமில் டா நாங் (Da Nang) அருகில் உள்ள மை சன் கோயில் (My Son Sanctuary) முக்கிய ஹிந்து கோயில் குழுமமாகும்.
இதை எழுப்பியவர்களும் சம்பா மன்னர்கள்தான். பத்ரவர்மன் (Bhadravarman) என்ற மன்னரின் பெயரால் இங்குள்ள சிவன் கோயில் 'பத்ரேஸ்வரர்' (Bhadresvara) என்று அழைக்கப்பட்டது. இங்கு ஏராளமான சமஸ்கிருத கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.
சம்பா மன்னர்கள் தீவிர சிவபக்தர்களாக இருந்தனர். சக்தி வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்தனர். விஷ்ணு கோயில்களும் எழுப்பப்பட்டன. தமிழகத்தின் பல்லவர், சோழர்களின் கட்டடக்கலை பாணியைப் பின்பற்றி, அவர்கள் செங்கற்களால் பல ஆலயங்களை எழுப்பினர். இந்த இரண்டு கோயில்கள் தவிர, 50க்கும் மேற்பட்ட ஹிந்துக் கோயில்களின் எச்சங்கள் இன்றும் வியட்நாமில் உள்ளன.
வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கவும், கலாசாரத் தொடர்புகளை மேம்படுத்தவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியத் தொல்லியல் துறையினர் மை சன், போ நகர் கோயில்களில் ஆய்வு செய்துள்ளனர்.
மை சன் கோயில் ஆய்வின்போது, 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணல் கல்லால் செய்யப்பட்ட பெரிய சிவலிங்கம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
