PUBLISHED ON : ஜன 26, 2026

1930ஆம் ஆண்டு ஜனவரி 26- அன்று, லாகூரில் இந்திய தேசிய காங்கிரஸ், 'பூர்ண ஸ்வராஜ்' (முழு சுதந்திரம்) பிரகடனத்தை வெளியிட்டது. அந்த வரலாற்று நாளை நினைவுகூரும் வகையிலேயே ஜனவரி 26ஆம் தேதி இந்தியக் குடியரசு தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1950-இல் இந்தியாவின் முதல் குடியரசு தின அணிவகுப்பு டில்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் (தற்போது மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம்) நடைபெற்றது. அந்த விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ (Sukarno) கலந்துகொண்டார்.
இந்திய அரசியலமைப்பின் அசல் பிரதியை அழகான கையெழுத்தில், தன் கைப்பட எழுதியவர், பிரேம் பிஹாரி நாராயண் ரைசாதா (Prem Behari Narain Raizada). இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இவர்தான் எழுதியிருந்தார். இதற்கு ஆறுமாதங்கள் தேவைப்பட்டன. இந்த அசல் பிரதிகள் இன்றும் நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்பின் ஒவ்வொரு பக்கத்தையும் அழகான ஓவியங்களால் அலங்கரித்தவர் சாந்திநிகேதனைச் சேர்ந்த நந்தலால் போஸ் (Nandalal Bose), அவரது குழுவினர். இந்தியாவின் 5,000 ஆண்டுகால நாகரிகம், வரலாறு, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அழகான ஓவியங்களால் அலங்கரித்தனர். இதில் மொகஞ்சதாரோ, இராமாயணம், மகாபாரதம் முதல் சுதந்திரப் போராட்டம் வரை சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பை, அமெரிக்க அரசியலமைப்பு வல்லுநர் கிரான்வில் ஆஸ்டின் (Granville Austin) இது ஒரு 'சமூக ஆவணம்' (Social Document) என்று புகழ்ந்தார். அடிப்படை உரிமைகள், அரசு வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என அவர் விளக்கினார்.

