PUBLISHED ON : ஜூன் 01, 2026

நாம் ஒரு புதிய மொழியைக் கற்கும்போது எப்படி எழுத்துப்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் ஏற்படுகின்றனவோ, அதேபோலக் கணினிக்குக் கட்டளைகளை எழுதும்போதும் (Programming) ஏற்படுவது இயல்பானதே. மென்பொருள் துறையில் இத்தகைய பிழைகளை 'பக்ஸ்' (Bugs) என்றும், இவற்றைத் திருத்தும் முறையை 'டீ-பக்கிங்' (Debugging) என்றும் அழைக்கிறார்கள். இங்கு நிரல் எழுதும்போது ஏற்படும் சில பிழைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக அந்தப் பிழையின் பெயர் என்ன என்பதைச் சரியாகச் சொல்லுங்கள்.
1. நிரல் சாதாரணமாக இயங்கி, ஆனால் தவறான விடையைத் தரும்போது (உதாரணத்திற்குக் கூட்டலுக்குப் பதிலாகக் கழித்தல் குறியைப் பயன்படுத்தினால்) ஏற்படும் பிழை எது?
2. 5 மதிப்புகளைக் கொண்ட ஒரு வரிசையை (Array of size 5) நிரலில் உருவாக்கிவிட்டு, இல்லாத 10வது மதிப்பை (array[10]) நாம் அணுக முயன்றால் என்ன பிழை வரும்?
3. நிரலில் 'A' என்ற செயல்பாடு 'B' ஐ அழைக்கிறது, 'B' மீண்டும் 'A' ஐ அழைக்கிறது என முடிவில்லாமல் சுழற்சி முறையில் அழைக்கும்போது (Infinite Recursion) வரும் பிழை எது?
4. கணினியிடம் ஓர் எண்ணைப் பூஜ்ஜியத்தால் (Zero) வகுக்கச் சொல்லும்போது ஏற்படும் பிழை எது?
5 நிரலில் int x = 'வணக்கம்' என்று எண்ணெழுத்து மாறிக்கு உரை (String) மதிப்பைத் தரும்போது ஏற்படும் பிழை எது?
விடை:
1. Logical Error (தர்க்கப் பிழை)
2. Index Out of Bounds Error
3. Stack Overflow Error
4. Divide by Zero Error
5. Data Type Error / Type Mismatch Error
